யுனைடெட் குழுவுடன் சமநிலை கண்ட உல்வ்ஸ்

யுனைடெட் குழுவுடன் சமநிலை கண்ட உல்வ்ஸ்

2 mins read

மான்செஸ்டர்: உல்வஸ், மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுக்கள் மோதிய ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் நான்காம் இடத்தில் உள்ள செல்சியுடனான புள்ளி இடைவெளியைக் குறைக்கும் வாய்ப்பை இரு குழுக்களும் தவறவிட்டன.

நேற்று அதிகாலை நடந்த இக்குழுக்கள் மோதிய இபிஎல் ஆட்டம் கோல்களின்றி சமநிலை கண்டது.

இதனால் இக்குகுழுக்கள் செல்சியைவிட ஆறு புள்ளிகள் பின்தங்கி, ஆறு, ஏழாவது இடங்களுக்குக் கீழிறங்கியது.

47 மில்லியன் பவுண்டுக்கு வாங்கப்பட்ட மேன்யூவின் புதிய வரவான புருனோ ஃபெர்னாண்டிஸ் இந்த ஆட்டத்தில் மத்திய திடல் வீரராக அறிமுகம் கண்டார்.

தன் முதல் ஆட்டத்தில் முத்திரை பதிக்க போராடிய பெர்னாண்டிசால், கோல் எதுவும் போடவில்லை என்றாலும் அதற்கான அவரது முயற்சி திருப்திகரமாக இருந்தது.

அவரது முதல் கோல் முயற்சி கோல் வலைக்கு வெளியே சென்று ஏமாற்றமளித்த நிலையில், இரண்டாவது முயற்சியின்போது, அவர் உதைத்த பந்து நேராக எதிரணி வீரருக்கு அருகில் போய் விழுந்தது.

ஒரு சில கோல் வாய்ப்புகளையே உருவாக்கிய மேன்யூ, கட்டுக்கோப்புடன் விளையாடிய உல்வ்ஸ் குழுவின் தற்காப்பை உடைக்கத் தவறியது தெளிவாகத் தெரிந்தது.

முதன்முறையாக அடுத்த சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதி பெறும் குறிக்கோளுடன் விளையாடிய உல்வ்ஸ், கோல்களை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என்ற அதீத எச்சரிக்கை உணர்வோடு விளையாடியதால், கோல் போட தவறிவிட்டது. இதனால் ஆட்டம் கோல்களின்றி சமநிலை கண்டது.

நியூகாசல், நார்விச் குழுக்கள் மோதிய ஆட்டமொன்றும் கோல்களின்றி சமநிலை கண்டது.

மற்றோர் ஆட்டத்தில் வாட்ஃபர்ட் குழுவை எவர்ட்டன் 3-2 என வெற்றி கொண்டது.

வெஸ்ட்ஹேம், பிரைட்டன் ஆட்டம் 3-3 என சமநிலை கண்டது.

மற்ற ஆட்டங்கள்: கிறிஸ்டல் பேலஸ் 0-1 செப்ஃபீல்ட் யுனைடெட், போர்ன்மத் 2-1 ஆஸ்டன் வில்லா, லெஸ்டர் 2-2 செல்சி.