நியூசிலாந்து மண்ணில் வரலாறு படைத்த இந்தியா

2 mins read

மவுண்ட் மங்கானி: நியூசிலாந்து மண்ணில் 20 ஓவர் கிரிக்கெட் தொடரை முழுவதுமாக கைப்பற்றிய முதல் வெளிநாட்டு அணி என்ற வரலாற்றைப் படைத்

துள்ளது இந்திய அணி.

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில், இந்திய அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இச்சாதனையை எட்டியது.

ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றி இருந்த இந்திய அணி, நேற்று ஐந்தாவது 20 ஓவர் போட்டியில் விளையாடியது.

கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த நிலையில், ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்தினார்.

இதில் பூவா, தலையா வென்ற ரோகித், முதலில் பந்தடிப்பைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ராகுல் (45), ரோகித் சர்மா (60) ஆகியோர் கைகொடுக்க இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 163 ஓட்டங்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணிக்கு கப்டில் (2) மீண்டும் மோசமான துவக்கம் அளித்தார். மற்றொரு துவக்க வீரர் கொலின் மன்ரோவும் (15) நிலைக்கவில்லை. அடுத்து வந்த டாம் புரூஸ் ஓட்டமெடுக்காமல் ஆட்டமிழந்தார்.

பின் இணைந்த செய்பர்ட், டெய்லர் இருவரும் அணியைச் சரிவில் இருந்து மீட்டனர்.

இவர்கள் 99 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் செய்பர்ட் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அதற்குப் பின் நியூசிலாந்து அணி தடுமாறியது.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 4 ஓவரில் 35 ஓட்டங்கள் தேவைப்பட்டது. தாகூர் வீசிய அடுத்த ஓவரில் சாண்ட்னர் (6), ககலைன் (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர். மேலும் அந்த ஓவரில் நியூசிலாந்து அணி வெறும் 4 ஓட்டங்கள் மட்டுமே அடிக்க, டெய்லரும் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து நியூசிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 156 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அனைத்துலக இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 25வது முறையாக அரைசதம் அடித்து

புதிய உலக சாதனையை எட்டியுள்ளார் இந்திய வீரர் ரோகித் சர்மா.

முன்னதாக இப்பட்டியலில் முதலிடம் வகித்த விராத் கோஹ்லியின் சாதனையை ரோகித் சர்மா தற்போது தகர்த்துள்ளார்.