கனவை நனவாக்கும் தூரத்தில் லிவர்பூல்

கனவை நனவாக்கும் தூரத்தில் லிவர்பூல்

2 mins read
f3c8c6a4-9bdc-45de-889e-f3cb612abc50
லிவர்பூலின் நான்காவது கோலைப் போட்ட மகிழ்ச்சியில் முகமது சாலா. படம்: இபிஏ -

ஆன்ஃபீல்ட்: தனது சொந்த மைதானத்தில் சௌத்ஹேம்டன் குழுவை 4-0 என நசுக்கிய லிவர்பூல், இபிஎல் வரலாற்றில் 22 புள்ளிகள் என ஆக அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் இருந்தது.

இரண்டாம் இடத்தில் இருக்கும் சிட்டிக்கும் டோட்டன்ஹம்மிற்கும் இடையே நேற்று நடைபெறவிருந்த ஆட்டத்திற்குப் பிறகு இந்த புள்ளி வித்தியாசத்தில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

மேலும் இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் 20 இபிஎல் ஆட்டங்களை வென்ற சிட்டியின் சாதனையையும் பெல் ஷான்கிலி நிர்வாகியாக இருந்தபோது 1972ல் லிவர்பூல் படைத்த சாதனையையும் கிளோப்பின் லிவர்பூல் சமன் செய்துள்ளது.

இதுதவிர, கடந்த பருவத்தையும் சேர்த்து இபிஎல் தொடரின் கடைசி 42 ஆட்டங்களாக லிவர்பூலின் தோல்வியில்லா பயணம் தொடர்கிறது.

"நாங்கள் எங்கள் திறமைகளை மிகச்சிறந்த முறையில் பயன்படுத்துகிறோம். வீரர்கள் அதைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த புள்ளிகள் பெற்றுள்ளோம்.

"22 புள்ளிகள் முன்னிலை பெறுவது எங்கள் விருப்பமில்லை. மாறாக இன்றைய ஆட்டத்தில் 73 புள்ளிகளைப் பெறவே நாங்கள் விரும்பினோம்," என்று கிளோப் கூறினார்.

நேற்றைய ஆட்டத்தின் பிற்பாதி நேரத்தில்தான் லிவர்பூலின் நான்கு கோல்களும் விழுந்தன.

முற்பாதி ஆட்டத்தில் லிவர்பூலின் மந்தமான ஆட்டம், பின்

வரிசையில் நடந்த தவறுகள், முன்னோக்கி செல்வதற்கான ஆர்வமில்லாமை ஆகியவற்றால் கிளோப் முதல் தோல்வியை எதிர்கொள்ள நேரிடுமோ என்ற நிலை இருந்தது.

அதற்கேற்றாற் போல் அமைந்தது சௌத்ஹேம்டனின் டேனி இங்ஸ் முற்பாதி நேரத்தில் மேற்கொண்ட கோல் முயற்சி.

நல்லவேளையாக லிவர்பூல் கோல்காப்பாளர் அலிசன், அந்த கோலை மட்டுமல்லாது ஷேன் லாங்கின் கோல் முயற்சியையும் தடுத்துவிட்டார்.

கடைசி பத்து ஆட்டங்களில் லிவர்பூல் ஒரு கோல் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற்பாதி ஆட்டத்தில் சுதாரித்துக்கொண்ட லிவர்பூலின் முதல் கோலை சேம்பர்லேன் போட்டார். அவரைத் தொடர்ந்து ஜோர்டன் ஹென்டர்சன், சாலாவின் இரட்டை கோல் என கோல் எண்ணிக்கை மொத்தம் நான்கானது.

பிரிமியர் லீக் பட்டத்தைக் கைப்பற்ற லிவர்பூலுக்கு மீதமுள்ள 13 ஆட்டங்களில் ஏழு வெற்றிகள் போதும்.

இந்நிலையில் அக்குழுவின் பட்டத்தை வெல்லும் 30 ஆண்டுகால கனவு இப்பருவத்தில் நிறைவேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், லிவர்பூலின் தோல்வியில்லா பயணம் இப்பருவம் முழுவதும் தொடருமா என்ற எதிர்பார்ப்பே தற்போது எழுந்துள்ளது.