வெலிங்டன்: ஆட்ட முடிவுகள் ஒருபோதும் ஒருவரின் தலைமைத்துவப் பண்புகளைத் தீர்மானிக்காது என்று இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அவ்வணிக்கெதிரான ஐந்து டி20 போட்டிகளையும் வென்று வரலாறு படைத்தது. கடைசி, ஐந்தாவது போட்டியில் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதேபோல, காயத்திலிருந்து குணமடையாததால் நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சனும் விளையாடவில்லை.
போட்டியின்போது அவ்விருவரும் எல்லைக்கோட்டருகே அமர்ந்து பேசியபடி இருந்தது ரசிகர்களுக்கு வியப்பளித்தது.
போட்டிக்குப்பின் வில்லியம்சனுடனான உரையாடல் குறித்து செய்தியாளர்களிடம் கோஹ்லி பகிர்ந்துகொண்டார்.
"நான் ஏற்கெனவே சொன்னதைப் போல, ஆட்ட முடிவுகள் ஒருபோதும் ஒருவரின் தலைமைத்துவத்தைத் தீர்மானிக்காது. வில்லியம்சனுடனான உரையாடல் மிக அருமையானதாக இருந்தது. அது எப்போதும் என் நினைவில் இருக்கும். வாழ்க்கையை, கிரிக்கெட்டைப் பற்றிய அவரது எண்ணங்களைப் பார்க்கும்போது அவர் ஒரு முழுமையான மனிதர் என எனக்குத் தோன்றுகிறது. நியூசிலாந்து அணியை வழிநடத்த மிகச் சரியானவர் அவர்தான். நியூசிலாந்து அணி விளையாடுவதைக் காணவும் அவ்வணிக்கு எதிராக விளையாடுவதையும் எல்லாருமே விரும்புவர்," என்றார் கோஹ்லி.
இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கவிருக்கிறது.

