லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு, நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோற்றுப்போனது.
ஆயினும், தம் குழுவினரைக் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா குறைகூறவில்லை.
மாறாக, இந்தப் பருவத்தில் பட்டம் கைவிட்டுப்போனதை ஒத்துக்கொண்ட அவர், அடுத்த பருவத்தில் தம் குழுவினர் சிறப்பாக ஆடவேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.
"லிவர்பூல் குழுவைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆகையால், இனி மற்ற போட்டித் தொடர்களும் அடுத்த பருவ சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தகுதிபெறுவதுமே எங்கள் இலக்கு," என்றார் அவர்.
லிவர்பூலுக்கும் சிட்டிக்குமான புள்ளி வித்தியாசம் மிக அதிகம் என்பதால் அடுத்த பருவத்தில் தமது குழு மேம்பட்ட செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் சொன்னார்.
ஸ்பர்சுக்கு எதிரான ஆட்டத்தில் கோலடிக்க சிட்டி குழுவினர் 18 முறை முயன்றபோதும் அதில் ஒருமுறைகூட வெற்றி கிடைக்கவில்லை. மாறாக, மூன்று கோல் முயற்சிகளில் இரண்டில் வெற்றி கண்டது ஸ்பர்ஸ் குழு.
ஸ்பர்ஸ் சார்பில் முதன்முறையாகக் களமிறங்கிய நெதர்லாந்து மத்தியத் திடல் வீரர் ஸ்டீவன் பெர்க்வைன் 63வது நிமிடத்தில் கோலடித்து, தமது குழுவிற்கு முன்னிலை பெற்றுத் தந்தார். 71வது நிமிடத்தில் தென்கொரிய வீரர் சோன் ஹியூங் மின் அடித்த கோலால் ஸ்பர்சின் வெற்றி உறுதியானது.
முன்னதாக, சிட்டிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றத் தவறினார் இல்காய் குண்டொவான். 60வது நிமிடத்தில் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்றதால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார் சிட்டியின் அலெக்சாண்டர் ஸின்செங்கோ.
ஆட்டத்தின் 70% நேரத்தில் சிட்டி வீரர்களின் வசமே பந்து இருந்தபோதும் அதை அவர்கள் சாதகமாக்கிக்கொள்ளத் தவறினர். அக்குழுவின் நட்சத்திரத் தாக்குதல் வீரர் செர்ஜியோ அகுவேரோவும் பல கோல் வாய்ப்புகளை வீணடித்தார்.
பர்ன்லி-ஆர்சனல் குழுக்கள் மோதிய மற்றோர் ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.

