ஹேமில்டன்: இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேற்று வெற்றி பெற்றது.
நியூசிலாந்தின் ஹேமில்டன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் பூவா தலையாவில் வென்ற நியூசிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன் அடிப்படையில் முதலில் பந்தடித்த இந்திய அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 347 ஓட்டங்களைச் சேர்த்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய இளம் வீரர்களான பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் பெரிய அளவில் ஓட்டங்களைக் குவிக்கவில்லை. பிரித்வி ஷா 20 ஓட்டங்களிலும் அகர்வால் 32 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதிகபட்சமாக இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் 103 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் 88 ஓட்டங்களையும் குவித்தனர்.
ஒருநாள் போட்டிகளில் முதல் சதம்
சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர், அனைத்துலக ஒருநாள் போட்டிகளில் தமது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 107 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்தார்.
மற்றொருபுறம் அதிரடியாக விளையாடிய ராகுல், 64 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரி உள்பட 88 ஓட்டங்களைக் குவித்தார்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அணித் தலைவர் விராத் கோஹ்லி, அரை சதத்துடன் வெளியேறினார்.
பின்னர் 348 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி, ஆரம்பத்தில் சற்று திணறினாலும் பின்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
குறிப்பிடும்படியாக, ராஸ் டெய்லர் 84 பந்துகளில் 109 ஓட்டங்களையும் டாம் லாதம் 48 பந்துகளில் 69 ஓட்டங்களையும் குவிக்க, 49வது ஓவரில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 348 ஓட்டங்களை எடுத்து நியூசிலாந்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. அடுத்து ஆக்லாந்து நகரில் நாளை மறுதினம் 2வது போட்டி நடைபெறவுள்ளது.

