இளையர்களுக்கான உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானிய அணிக்கு எதிராக சதம் அடித்ததை ஒருபோதும் மறக்க மாட்டேன் என இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்திய-பாகிஸ்தானிய அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் பந்தடிப்பு செய்த பாகிஸ்தான் 172 ஓட்டங்களில் சுருண்டது. அதன்பின் இந்திய அணியின் ஜெய்ஸ்வால், சக்சேனா ஆகியோர் விக்கெட் இழக்காமல் ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர். இடது கை பந்தடிப்பாளரான ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஜெய்ஸ்வால், ''பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசியதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. எனது நாட்டிற்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.
"இதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கிண்ணத்தில் அடித்த இந்த சதத்தை ஒருபோதும் மறக்க மாட்டேன்'' என்று கூறினார்.

