ஸ்பர்ஸ் வீரர்களுக்குப் பாராட்டு

ஸ்பர்ஸ் வீரர்களுக்குப் பாராட்டு

2 mins read
ab03bbd8-a160-4727-aa42-bac2e0ac6bbd
ஆட்டம் முடியும் தறுவாயில் கிட்டிய பெனால்டி வாய்ப்பைக் கோட்டைவிடாமல் கோலாக மாற்றி, ஸ்பர்ஸ் குழுவை வெற்றிபெறச் செய்த தென்கொரியாவின் சோன். படம்: இபிஏ -

லண்டன்: எஃப்ஏ கிண்ணக் காற்பந்தின் நான்காம் சுற்று மறுஆட்டத்தில் சௌத்ஹேம்டனை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றினுள் நுழைந்த டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு ஆட்டக்காரர்களை அதன் நிர்வாகி ஜோசே மொரின்யோ வெகுவாகப் புகழ்ந்தார்.

"நாங்கள் மிகவும் இக்கட்டான நிலைமையில் இருந்தோம். மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான பிரிமியர் லீக் ஆட்டத்திற்குப் பிறகு வீரர்கள் மிகவும் களைப்புடன் காணப்பட்டனர். சௌத்ஹேம்டன் ஆட்டக்காரர்கள் உடல் வலிமையிலும் வேகத்திலும் எங்களைவிட மேம்பட்டவர்களாக இருந்தனர். அவர்களே சிறந்த அணி. ஆனாலும், எங்கள் வீரர்களின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது. ஆட்டத்தில் மனத்தை முழுமையாக ஈடுபடுத்தி, தங்களால் முடிந்த அளவுக்கு அவர்கள் சிறப்பாக விளையாடினர். சிறந்த அணி தோற்றபோதும் நாங்கள் வெற்றிக்குத் தகுதியானவர்களே," என்றார் மொரின்யோ.

சௌத்ஹேம்டனின் ஜேக் ஸ்டீஃபன்ஸ் 12வது நிமிடத்தில் சொந்த கோலடித்ததால் ஸ்பர்ஸ் குழு முன்னிலை பெற்றது. ஆயினும், 34வது, 72வது நிமிடங்களில் முறையே ஷேன் லாங்கும் டேனி இங்சும் கோலடிக்க, சௌத்ஹேம்டன் முன்னிலைக்குச் சென்றது.

அடுத்த ஆறாவது நிமிடத்தில் ஸ்பர்ஸ் ஆட்டக்காரர் லூக்கஸ் மோரா பந்தை எதிரணியின் வலைக்குள் புகுத்தி, ஆட்டத்தைச் சமனுக்குக் கொண்டு வந்தார். ஆட்டம் முடிய மூன்று நிமிடங்களே இருந்தபோது கிடைத்த பெனால்டி வாய்ப்பை சோன் ஹியூன் மிங் சரியாகப் பயன்படுத்தி கோலடிக்க, ஸ்பர்ஸ் வெற்றி பெற்று நிம்மதி அடைந்தது.

மார்ச் மாத இறுதியில் நடக்கவுள்ள ஐந்தாம் சுற்று ஆட்டத்தில் ஸ்பர்ஸ், நார்விச் சிட்டியுடன் மோதும். இதனிடையே, நாளை மறுநாள் நடக்கும் பிரிமியர் லீக் ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லாவை ஸ்பர்ஸ் எதிர்கொள்ளவிருக்கிறது.