மெஸ்ஸிக்குக் குறிவைக்கும் சிட்டி

மெஸ்ஸிக்குக் குறிவைக்கும் சிட்டி

1 mins read

மான்செஸ்டர்: பார்சிலோனா காற்பந்துக் குழுவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸிக்கும் அக்குழுவின் விளையாட்டு இயக்குநர் எரிக் அபிடாலுக்கும் இடையே உரசல் எழுந்துள்ளது. இதைஅடுத்து, பார்சிலோனாவைவிட்டு மெஸ்ஸி வெளியேற முடிவுசெய்தால் அவரைத் தன்வசம் இழுத்துக்கொள்ள மான்செஸ்டர் சிட்டி குழு காய்நகர்த்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குழு வீரர்கள் அளித்த நெருக்குதல் காரணமாகவே பார்சிலோனா முன்னாள் நிர்வாகி வல்வெர்டேவைப் பதவிநீக்கம் செய்ததாக அபிடால் கூறியிருந்தார். இதனால் கடுப்பான மெஸ்ஸி, அப்படி நெருக்குதல் அளித்தது உண்மையெனில் சம்பந்தப்பட்ட வீரர்களின் பெயரை அபிடால் வெளியிட வேண்டும் எனத் தமது இன்ஸ்டகிராம் பக்கம் வழியாக பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில், 32 வயதான மெஸ்ஸி இப்பருவத்துடன் பார்சிலோனாவைவிட்டு வெளியேற ஒப்பந்தத்தில் உள்ள ஓர் அம்சம் அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது. ஆயினும், அவர் மான்செஸ்டர் சிட்டி போன்ற ஒரு குழுவுடன் இணைவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதனிடையே, பார்சிலோனாவைவிட்டு மெஸ்ஸி வெளியேறுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்பதை சிட்டியும் ஒப்புக்கொண்டுள்ளது. அதேவேளையில், இப்பருவத்துடன் அல்லது அடுத்த ஆண்டு ஒப்பந்தம் முடிந்ததும் மெஸ்ஸி வெளியேறத் தீர்மானித்தால் அவரைக் கொத்திச் செல்ல சிட்டி மிக ஆர்வமாக இருக்கிறது.