மட்ரிட்: ஸ்பானிய அரசர் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் ரியால் மட்ரிட் குழுவும் பார்சிலோனா குழுவும் கடந்த பத்தாண்டுகளில் முதன்முறையாகக் காலிறுதிச் சுற்றில் தோற்று வெளியேறின.
தன் சொந்த அரங்கில் வைத்து பார்சிலோனாவை எதிர்கொண்ட அத்லெட்டிக் பில்பாவ் குழு 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இடைநிறுத்தத்திற்காக இறுதியில் சேர்க்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இன்யாக்கி வில்லியம்ஸ் பந்தைத் தலையால் முட்டி வலைக்குள் தள்ளி, பில்பாவ் குழுவிற்கு வெற்றி தேடித் தந்தார்.
பார்சிலோனா குழுவின் முன்னாள் வீரரும் இப்போதைய விளையாட்டு இயக்குநருமான எரிக் அபிடால் மீது லயனல் மெஸ்ஸி, யோர்டி அல்பா ஆகிய வீரர்கள் கடுப்பில் இருக்கும் நிலையில், அக்குழு தோற்றிருப்பது கேள்வியை எழுப்பி உள்ளது.
ஆனால், அந்த விவகாரத்திற்கும் ஆட்டத்தில் தோற்றதற்கும் முடிச்சுப் போடவேண்டாம் என்றார் அக்குழுவின் ஸ்பானிய ஆட்டக்காரரான செர்ஜியோ புஸ்கெட்ஸ்.
இன்னொரு காலிறுதி ஆட்டத்தில், ரியால் மட்ரிட் குழுவிடம் இருந்து கடனாகப் பெற்ற மார்ட்டின் ஓடகார்டைக் கொண்டே அக்குழுவை ஓட ஓட விரட்டியடித்தது ரியால் சோஷியடாட். மிகவும் விறுவிறுப்பாக இருந்த இந்த ஆட்டத்தில் சோஷியடாட் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றியைச் சுவைத்து, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ஓடகார்ட் அக்குழுவின் கோல் வேட்டையைத் தொடங்கி வைக்க, அலெக்சாண்டர் ஐசக் இரு கோல்களை அடித்ததோடு நான்காவது கோலுக்கும் அடித்தளம் அமைத்துத் தந்தார்.
இதன்மூலம் தொடர்ந்து 21 ஆட்டங்களாக வீழ்த்த முடியாத குழுவாக வலம் வந்த ரியாலின் வெற்றிப் பயணமும் தடைபட்டது.
அரசர் கிண்ண வரலாற்றில் பார்சாவும் ரியாலும் ஒரே நாளில் தோற்றது 65 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல் முறை.

