மெல்பர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்னஸ் லபுஷேன், 25 (படம்), பந்தடிக்கும் விதம் தனது ஆட்டத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக முன்னாள், இந்நாள் வீரர்கள் பங்கேற்கும் கண்காட்சிப் போட்டி நாளை மெல்பர்னில் நடக்கவிருக்கிறது. அதில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியின் பயிற்றுவிப்பாளராக சச்சின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள சச்சினிடம், "இப்போதைய ஆட்டக்காரர்களில் உங்களைப் போல விளையாடுவது யார்?" என செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு, "லபுஷேன் கால்களை நகர்த்தி ஆடும் விதம் துல்லியமாகவும் நம்ப முடியாத வகையிலும் உள்ளது. ஆகையால், அவரைத்தான் நான் குறிப்பிடுவேன்," என்றார் சச்சின்.
தோள்பட்டை காயம் காரணமாக தான் போட்டியில் விளையாட முடியாமல் போனாலும் தானும் அதில் ஓர் அங்கமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் சச்சின் சொன்னார்.
இதனிடையே, மழை காரணமாக போட்டி சிட்னியில் இருந்து மெல்பர்னுக்கு மாற்றப்பட்டதால் மைக்கல் கிளார்க், ஷேன் வார்ன் அந்தக் கண்காட்சிப் போட்டியில் பங்கேற்கமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

