மான்செஸ்டர்: பிரிமியர் லீக்கின் முன்னணி காற்பந்துக் குழுக்களில் ஒன்றான மான்செஸ்டர் சிட்டியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவரான ரஹீம் ஸ்டெர்லிங்கால் பல வாரங்களுக்கு விளையாட முடியாமல் போகலாம் என்று அக்குழுவின் நிர்வாகி பெப் கார்டியோலா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டவரான 25 வயது ஸ்டெர்லிங், கடந்த ஞாயிறன்று டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவிற்கு எதிரான போட்டியின்போது பின்தொடைத் தசைநார் பகுதியில் காயமடைந்தார். அந்த ஆட்டத்தில் சிட்டி 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றுப்போனது.
"ஸ்டெர்லிங் குணமடைய வாரக் கணக்கில் ஆகலாம். அவர் எப்போது காற்பந்துத் திடலுக்குத் திரும்புவார் என இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியாது," என்றார் கார்டியோலா.
இந்தப் பருவத்தில் சிட்டி இதுவரை பங்கேற்ற 25 லீக் ஆட்டங்களில் 23ல் ஸ்டெர்லிங் விளையாடியுள்ளார்.
இதனிடையே, இன்றிரவு 12.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சிட்டி, வெஸ்ட் ஹேம் யுனைடெட் குழுவுடன் பொருதவுள்ளது.

