போட்செஃப்ஸ்ரூம்: தென்னாப்பிரிக்காவில் நடந்த பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, பங்ளாதேஷ் அணி கிண்ணத்தை வென்றது.
கிரிக்கெட் விளையாட்டில் பங்ளாதேஷ் அணி உலகக் கிண்ணத்தை வென்றிருப்பது இதுவே முதன்முறை.
இந்த உலகக் கிண்ணத் தொடரில் ஆடிய முந்தைய ஆட்டங்களில் தோல்வியே கண்டதில்லை என்ற பெருமையுடன் இரு அணிகளும் நேற்று முன் தினம் களத்தில் சந்தித்தன.
பூவா தலையாவில் வென்ற பங்ளாதேஷ் அணித் தலைவர் அக்பர் அலி முதலில் இந்திய அணியைப் பந்தடிக்குமாறு அழைத்தார்.
அதையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஷ்வாலும் திவ்யான்ஷ் சக்சேனாவும் களமிறங்கினர். இரு ஓட்டங்களுடன் சக்சேனா நடையைக் கட்டினார்.
யஷஸ்வி (88), திலக் வர்மா (38), துருவ் ஜுரேல் (22) ஆகிய மூவரைத் தவிர வேறு எந்த இந்திய வீரரும் இரட்டை இலக்கத்தை எட்ட முடியவில்லை.
இதனால் இந்திய அணி 47.2 ஓவர்களிலேயே 177 ஓட்டங்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்தது.
பின்னர் பந்தடித்த பங்ளாதேஷ் அணிக்கு பர்வேஸ் ஹொசைன் (47) - தன்ஸித் ஹசன் (17) இணை நல்ல தொடக்கம் தந்தது. இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 50 ஓட்டங்களைக் குவித்தனர்.
இருப்பினும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோயின் சுழலில் சிக்கி அந்த அணி நிலைகுலையத் தொடங்கியது. பிஷ்னோய் நான்கு விக்கெட்டுகளைச் சாய்க்க, ஒரு கட்டத்தில் பங்ளாதேஷ் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 102 ஓட்டங்கள் என இக்கட்டான நிலையில் இருந்தது.
அவ்வேளையில், பொறுப்பை உணர்ந்து, இறுதி வரை நிலைத்து ஆடி, 43 ஓட்டங்களைச் சேர்த்து தமது அணிக்குக் கிண்ணத்தைப் பெற்றுத் தந்தார் பங்ளாதேஷ் அணித்தலைவர் அக்பர் அலி. 42.1 ஓவர்களிலேயே ஏழு விக்கெட்டுகளை மட்டும் இழந்து பங்ளாதேஷ் அணி வென்று சாதித்தது.

