மவுண்ட் மாங்குனுய் (நியூசிலாந்து): நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடரை 5-0 என ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றிய இந்திய அணி, அதனையடுத்து நடந்து வரும் ஒருநாள் போட்டித் தொடரில் சரிவுகண்டது.
முதல் இரு ஆட்டங்களிலும் தோற்று தொடரை ஏற்கெனவே இழந்துவிட்ட நிலையில், இன்று நடக்கவிருக்கும் கடைசி, 3வது ஆட்டத்திலேனும் இந்திய அணி வென்று ஆறுதல் தேடிக்கொள்ளும் முனைப்புடன் இருக்கிறது.
ரோகித் சர்மா, ஷிகர் தவான் என்ற வழக்கமான தொடக்க வீரர்கள் இருவரும் இல்லாதது இந்திய அணியின் பலவீனத்தைத் தோலுரித்துக் காட்டியது. முதலிரு ஆட்டங்களில் பெரியளவில் ஓட்டம் குவிக்காத மயங்க் அகர்வால் - பிருத்வி ஷா என்ற புதிய தொடக்க இணை இன்று அந்த ஏமாற்றத்தைத் துடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணியில் உடல் நலம் குன்றியுள்ள பந்துவீச்சாளர்கள் டிம் சௌத்தி, மிட்செல் சான்ட்னர், ஸ்காட் குகலைன் ஆகிய மூவரும் விரைவில் தேறி, இன்றைய போட்டியில் பங்கேற்பர் என நம்பப்படுகிறது.

