சான் சிரோ: பரம எதிரியான ஏசி மிலான் காற்பந்துக் குழுவிற்கெதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில் முதலில் இரு கோல்களை விட்டுக்கொடுத்தபோதும் இரண்டாம் பாதியில் இன்டர் மிலான் குழு நான்கு கோல்களைப் போட்டு, 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றியைத் தனதாக்கியது.
இந்த வெற்றியின்மூலம் கோல் வித்தியாச அடிப்படையில் இத்தாலிய காற்பந்து லீக்கிலும் முதலிடத்தில் இருந்த யுவென்டஸ் குழுவைப் பின்னுக்குத் தள்ளி, உச்சநிலையைப் பிடித்தது இன்டர்.
ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் ஆன்டே ரெபிச்சும் முற்பாதியில் இறுதி நிமிடத்தில் இப்ராகிமோவிச்சும் கோலடிக்க, ஏசி மிலான் குழுவே வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆயினும், அன்டோனியோ கோன்டே பயிற்சியின்கீழ் முற்பாதியில் மந்தமாக ஆடிய இன்டர் குழுவினர், இரண்டாம் பாதியில் எழுச்சி பெற்றனர். இரு குழுவினரும் மாறி மாறி எதிரணியின் கோல் பகுதியை முற்றுகையிட்டனர். மூன்று முறை பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியதால் ரசிகர்களுக்கும் இந்த ஆட்டம் பெரும் விருந்தாக அமைந்தது.
இன்டர் சார்பில் புரோஸோவிச், வெசினா, டி விரிஜ், லுக்காகு ஆகியோர் ஆளுக்கு ஒரு கோலடித்து, அக்குழுவின் வெற்றியை உறுதி செய்தனர். இன்டர் குழு கடைசியாக ஆடிய 16 ஆட்டங்களிலும் வேறு எந்தக் குழுவாலும் அதனை வீழ்த்த முடியவில்லை.
அடுத்ததாக, சொந்த அரங்கில் நாளை நடக்கும் ஆட்டத்தில் நெப்போலி குழுவை எதிர்கொள்ளும் இன்டர், வரும் ஞாயிறன்று நடக்கவுள்ள இன்னொரு முக்கியமான ஆட்டத்தில் பட்டத்திற்குப் போட்டி போடும் லாஸியோவை எதிர்கொள்கிறது.

