மவுண்ட் மாங்குனுய் (நியூசிலாந்து): டி20 கிரிக்கெட் தொடரை 5-0 என முழுமையாகக் கைப்பற்றி நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை அமோகமாகத் தொடங்கிய இந்திய அணி, அதன்பின் நடந்த ஒருநாள் போட்டித் தொடரை 0-3 என முழுவதுமாக இழந்து ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
நியூசிலாந்துடனான இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்திய அணி இப்படி ஒரு போட்டியில்கூட வெல்ல முடியாமல் போனது கடந்த 31 ஆண்டுகளில் இதுவே முதன்முறை.
முதல் போட்டியில் 347 ஓட்டங்களைக் குவித்தபோதும் அதைத் தற்காக்க முடியாத இந்திய அணி, 2வது போட்டியில் 274 ஓட்டங்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் பணிந்தது. தொடர் கைவிட்டுப்போன நிலையில் நேற்று 3வது போட்டியிலேனும் வென்று ஆறுதல் அளிக்கும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மோசமான களக்காப்பும் புதுமுக வீரர்கள் இருவரின் பந்துவீச்சும் அந்த நம்பிக்கையைப் பொய்க்கச் செய்தது.
லோகேஷ் ராகுல் ஒருவருக்கு மட்டுமே இந்தச் சுற்றுப்பயணம் அற்புதமாக அமைந்தது. எந்த நிலையில் களமிறங்கியபோதும் அவர் பங்களிக்கத் தவறவில்லை.
கேதார் ஜாதவுக்குப் பதில் மணீஷ் பாண்டே என்ற ஒரே ஒரு மாற்றத்துடன் நேற்றைய போட்டியில் களமிறங்கிய இந்திய அணி முதலில் பந்தடித்தது.
மயங்க் அகர்வால் (1), விராத் கோஹ்லி (9) ஏமாற்றமளிக்க, சற்று நேரம் நம்பிக்கையளித்த பிருத்வி ஷாவும் 40 ஓட்டங்களை எடுத்த நிலையில் 'ரன் அவுட்' ஆகி வெளியேறினார்.
ஆனாலும், 4வது விக்கெட்டுக்கு இணைந்த ஷ்ரேயாஸ் ஐயர் - ராகுல் இணை விக்கெட் சரிவைத் தடுத்து நிறுத்தியது. ஷ்ரேயாஸ் 62 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் ராகுலுக்கு பாண்டே நல்ல ஒத்துழைப்பு வழங்க, இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையும் உயர்ந்தது.
இதனால் இந்திய அணி 300 ஓட்டங்களை எளிதாகக் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹமீஷ் பென்னட் வீசிய இன்னிங்சின் 47வது ஓவரில் ராகுல் 112 ஓட்டங்களுடனும் பாண்டே 42 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறினர். இதை அடுத்து, ஓட்டக் குவிப்பு வேகமும் தடைபட, இறுதியில் இந்திய அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 296 ஓட்டங்களை எடுத்தது.
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு மார்ட்டின் கப்டில் (66) - ஹென்ரி நிக்கல்ஸ் (80) நல்ல தொடக்கம் அமைத்துத் தந்தனர். சீரான வேகத்தில் ஓட்டக் குவிப்பு இருக்க, ஏழாவது வீரராகக் களமிறங்கிய கொலின் டி கிராண்ட்ஹோம் அதிரடியாக ஆடி பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டார். அவர் 28 பந்துகளில் 58 ஓட்டங்களை விளாச, 17 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணித் தரப்பில் ஷர்துல் தாக்குர் 9.1 ஓவர்களில் 87 ஓட்டங்களையும் நவ்தீப் சைனி எட்டு ஓவர்களில் 68 ஓட்டங்களையும் வாரி வழங்கினர்.
அடுத்ததாக இவ்விரு அணிகளும் மோதும் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 21ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.

