குழுவை வலுப்படுத்த மேன்யூ துணைத் தலைவர் தீவிரம்

குழுவை வலுப்படுத்த மேன்யூ துணைத் தலைவர் தீவிரம்

1 mins read

லண்டன்: வீரர்கள் குழு மாறுவதற்கான அடுத்த கோடைப் பருவம் மான்செஸ்டர் காற்பந்துக் குழுவிற்கு மிக முக்கியமான வாய்ப்பு எனத் தெரிவித்துள்ளார் அந்தக் குழுவின் துணைத் தலைவர் எட் உட்வர்ட். அந்த வாய்ப்பைத் தவறவிடாமல் திறமையான ஆட்டக்காரர்களை விலைக்கு வாங்கி, யுனைடெட் குழுவை வலுப்படுத்துவதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் இதுவரை 25 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் யுனைடெட் 35 புள்ளிகளுடன் எட்டாமிடத்தில் இருக்கிறது. ஆதலால், நான்காமிடத்திற்குள் வந்து அடுத்த சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடும் வாய்ப்பை அக்குழு பெறுவது குதிரைக்கொம்புதான்.

இதனால், குழு நிர்வாகி சோல்சியாரும் துணைத் தலைவர் உட்வர்டும் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளனர். அதிக முதலீடு செய்து நல்ல ஆட்டக்காரர்களை ஒப்பந்தம் செய்யத் தவறிவிட்டதாகக் கூறி, அண்மையில் உட்வர்ட் வீட்டின்மீது தீச்சுடர்களை வீசியெறிந்த ரசிகர்கள், வீட்டின் வெளிப்புறத்தையும் சேதப்படுத்தினர்.

இந்நிலையில், அண்மையில் ஸ்போர்ட்டிங் லிஸ்பன் குழுவில் இருந்து யுனைடெட்டுக்கு வந்த புருனோ ஃபெர்னாண்டசைப் போல இன்னும் பல திறமையான வீரர்களை இழுக்கும் ஆற்றல் யுனைடெட்டுக்கு உண்டு என உட்வர்ட் நம்புகிறார்.

"புருனோவின் வருகையாலும் முன்னணி வீரர்கள் காயத்தில் இருந்து குணமடைந்திருப்பதும் நிர்வாகி சோல்சியாருக்கு உத்வேகம் அளிக்கும் செய்தி. அனுபவமும் இளமையும் கலந்த ஒரு குழுவை உருவாக்குவதே எங்களது இலக்கு. குழு மறுசீரமைப்பைப் பொறுத்தமட்டில், கோடைப் பருவம் மிக முக்கியமான வாய்ப்பு. சோல்சியார் வந்த பிறகு புதிய வீரர்களை வாங்குவதற்காக 200 மில்லியன் பவுண்டு செலவிட்டுள்ளோம்," என்றார் அவர்.