இந்தியாவை வீழ்த்தினர் ஆஸ்திரேலிய மகளிர்

இந்தியாவை வீழ்த்தினர் ஆஸ்திரேலிய மகளிர்

2 mins read
800a2b65-7cae-4e46-a03b-af1bdfff9752
ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜெஸ் ஜோனாசென் ஆட்ட நாயகி விருது பெற்றார். படம்: ஏஎஃப்பி -

மெல்பர்ன்: மகளிர் அணிகளுக்குஇடையிலான 20 ஓவர் முத்தரப்பு கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த இத்தொடரில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லீக் சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இரு அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி மெல்பர்ன் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க வீராங்கனை பெத் மூனி ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இந்திய அணி தரப்பில் ராஜேஸ்வரி, தீப்தி சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ஷஃபாலி வெர்மா அதிரடியாக ஆட முயன்று ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் பொறுமையாக ஆடினர். அரைசதம் கடந்த ஸ்மிருதி மந்தனா 37 பந்துகளில் 12 பவுண்டரிகள் உள்பட 66 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் அதன் பின்னர் வந்த வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஜெமியா ரொட்ரிகஸ், அணித் தலைவி ஹர்மன்பிரீத் கௌர், அருந்ததி ரெட்டி ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாகியது.

இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 144 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜெஸ் ஜோனாசென் ஆட்ட நாயகி விருது பெற்றார்.