சிங்கப்பூர் பொது விருது பூப்பந்துப் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும்

‘கொவிட்-19’ எனப் பெயரிடப்பட்டு உள்ள கொரோனா கிருமித்தொற்று அச்சுறுத்தல் காரணமாக சிங்கப்பூரில் பல விளையாட்டு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு அல்லது தள்ளிவைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இவ்வாண்டு ஏப்ரல் 7-12 தேதிகளில் சிங்கப்பூர் பொது விருது பூப்பந்துப் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என சிங்கப்பூர் பூப்பந்துச் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு தோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற சிங்கப்பூர் பொது விருதுப் போட்டிகளே கடைசி வாய்ப்பு என்பதால் ஆட்டக்காரர்கள் பலரும் இதனைத் தவறவிட விரும்பவில்லை.

உலகத் தரவரிசையில் இரண்டாம் நிலையில் இருக்கும் தைவான் வீராங்கனை தை ஸு யிங்கும் அவர்களில் ஒருவர். கடந்த ஆண்டில் சிங்கப்பூர் பொது விருதுப் பட்டம் வென்ற அவர், இவ்வாண்டிலும் அதைத் தக்கவைக்கும் முனைப்பில் இருக்கிறார்.

“தோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல விரும்புகிறேன். அதற்காக அயராது, கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். சிங்கப்பூர் பொது விருது உட்பட எந்தப் போட்டியுமே புதியதொரு சவாலாகப் பார்க்கப்பட வேண்டும்,” என்றார் யிங்.

சக தைவான் வீரரும் 2018ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பொது விருதுப் பட்டத்தை வென்றவருமான சுவா டியன் சென்னும் தமது பங்கேற்பை உறுதிசெய்துள்ளார்.

மகளிர் பிரிவில் நடப்பு உலக வெற்றியாளரான ஸ்பெயினின் கரோலினா மரின், முன்னாள் உலக வெற்றியாளரான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோன் ஆகியோரும் சிங்கப்பூர் பொது விருதுப் போட்டியில் விளையாட உள்ளனர்.

போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ராபர்ட் லிம் கூறுகையில், “ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூர் பொது விருதுப் போட்டிகளை நடத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். விளையாட்டாளர்கள், பார்வையாளர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என அனைவரின் உடல்நலனுக்கும் சுகாதாரத்திற்கும் அதிக முன்னுரிமை அளிப்போம். நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து, உரிய ஆணையங்களின் அதிகாரபூர்வ அறிவிப்புகளை ஏற்று நடப்போம்,” என்றார்.