ஓர் ஓட்டத்தில் தோற்ற இங்கிலாந்து

ஈஸ்ட் லண்டன்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஓர் ஓட்ட வித்தியாசத்தில் தோற்றுப்போனது.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் நேற்று முன்தினம் தென்னாப்பிரிக்காவின் ஈஸ்ட் லண்டனில் நடந்தது.

முதலில் பந்தடித்த குவின்டன் டி காக் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் டெம்பா பவுமா 43 ஓட்டங்களைக் குவித்தார்.

இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி லுங்கி இங்கிடி வீசிய கடைசி ஓவரில் ஏழு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. ஆனால், அந்த ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து ஐந்து ஓட்டங்களை மட்டும் எடுத்து அந்த அணி தோல்வியடைந்தது.

கடைசி ஓவரில் மிரட்டிய இங்கிடி ஆட்ட நாயகனாகத் தேர்வு பெற்றார்.

இந்த ஆட்டத்தில் ஜோஸ் பட்லரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அனைத்துலக டி20 போட்டிகளில் அதிக விக்கெட் (62) வீழ்த்திய தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார் டேல் ஸ்டெய்ன்.

இரண்டாவது டி20 போட்டி டர்பனில் நாளை நடக்கிறது.