அலிசன்: பட்டம் வெல்வதே எங்கள் விருப்பம்

நார்விச்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவின் சறுக்கலுக்கு முக்கியமான காரணமாக அமைந்த நார்விச் குழுவை இன்று இரவு எதிர்கொள்கிறது பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் லிவர்பூல் குழு.

இப்பருவத்தின் தொடக்க ஆட்டத்தில் நார்விச் குழுவை தன் சொந்த மண்ணில் 4-0 என லிவர்பூல் வீழ்த்திய போது தொடங்கியது பட்டத்தை வெல்வதற்கான அக்குழுவின் வெற்றி வேட்டை.

அந்த ஆட்டத்தில் லிவர்பூலின் முக்கிய கோல்காப்பாளரான அலிசன் காயமடைந்து இரண்டு மாதத்திற்கு விளையாட முடியாமல் போனது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்ட போதும் வெற்றி நடை போட்டது அக்குழு.

மேன்யூவிடம் 1-1 என்று சமநிலை கண்டதைத் தவிர இப்பருவத்தின் 24 ஆட்டங்களிலும் வெற்றியை மட்டுமே பதிவு செய்து வரும் லிவர்பூல், 22 புள்ளிகள் வித்தியாசத்தில் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

மேலும் இபிஎல் வரலாற்றில் ஆக அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ள குழு என்ற பெருமையையும் பெற்றுள்ளது லிவர்பூல்.

இந்நிலையில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று, பட்டியலில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ள நார்விச் குழுவை எதிர்கொள்கிறது லிவர்பூல்.

கடைசி நிலையில் உள்ள குழுவை எதிர்கொள்வது லிவர்பூலுக்கு எளிதானதாகவே இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

என்றாலும் கடந்த செப்டம்பர் மாதத்தில் நார்விச் குழு 3-2 என சிட்டியை வீழ்த்திய கோணத்தில் பார்க்கும்போது, இன்றைய ஆட்டத்தில் லிவர்பூல் எச்சரிக்கையாக விளையாட வேண்டும் என்று கூறப்படுகிறது.

மேலும் தன் சொந்த மைதானத்தில் விளையாடுவது நார்விச் குழுவிற்குப் பக்கபலமாகப் பார்க்கப்படுகிறது.

அதே வேளையில் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள லிவர்பூலின் சாடியோ மனே, இன்றைய போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லிவர்பூலின் 15 கோல்களுக்குக் காரணமான அவர், குழுவிற்குத் திரும்பியிருப்பது பெரும் பலமாக கருதப்படுகிறது.

“பட்டம் வெல்வதே எங்களின் விருப்பம். அதற்காக நாங்கள் அனைத்தையும் வெல்ல வேண்டும். அதற்கு ஒவ்வோர் ஆட்டத்தையும் அனுபவித்து விளையாட வேண்டும்,” என்று ஆட்டத்திற்கு முந்திய செய்தியாளர் சந்திப்பின்போது லிவர்பூல் கோல்காப்பாளர் அலிசன் கூறினார்.

இதற்கிடையே, ‘டெனிஸ்’ சூறாவளி காரணமாக வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon