தடுமாறிய தொடக்க வீரர்கள், மீட்டெடுத்த விகாரியின் சதம்

ஆக்லாந்து: நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், புஜாராவும் விகாரியும்  இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர்.

நியூசிலாந்தில் சுற்றுப் பயணம்  மேற்கொண்டுள்ள இந்திய அணி,  இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21ஆம் தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது.

டெஸ்ட் போட்டிக்கு முன்பு இந்திய அணி, நியூசிலாந்து லெவன் அணியுடன் மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம் ஹேமில்டனில் நேற்று தொடங்கியது.

பூவா தலையா வென்ற இந்தியா பந்தடிப்பைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான பிருத்வி ஷா,  மயங்க் அகர்வால் மீண்டும் ஏமாற்றம் அளித்தனர். பிருத்வி ஷா ஓட்டமெதுவும் எடுக்காமலும் அகர்வால் ஓர் ஓட்டத்திலும் வெளியேறினார்கள். அடுத்து வந்த புதுமுக வீரர் ஷுப்மான் கில் ஓட்டமெதுவும் எடுக்காமலும் ரகானே 18 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் 38 ஓட்டங்களுக்கு இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் குகிலின் பந்துவீச்சில் பிரித்வி ஷா, சுப்மான் கில், மயங்க் அகர்வால் மூவரும் விக்கெட்டை பறிகொடுத்தார்கள்.

5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புஜாரா, விகாரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் அரை சதத்தைக் கடந்தனர். அவர்களது அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு முன்னேற்றம் அடைந்தது.

புஜாரா 93 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். விகாரி 101 ஓட்டமெடுத்து வெளியேறினார். அப்போது இந்தியா 245 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அதன்பின் வந்த ரிஷப் பண்ட் (7), சகா (0), அஷ்வின் (0) ஜடேஜா (8) அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியா 263 ஓட்டங்களில் சுருண்டது. 78.5 ஓவர்கள் வீசப்பட்டதால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிக்கப்பட்டது. 

நியூசிலாந்தின் குகிலின், இஷ் சோதி தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்திய அணியில் ரோகித் சர்மா, தவான் இல்லாத நிலையில் அடுத்து வரும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் யார் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறக்கப்படுவார்கள்  என்பதில் குழப்பம் நீடிக்கிறது. 

இந்நிலையில், பயிற்சி ஆட்டத்தில், பிருத்வி ஷா, சுப்மான் கில், மயங்க் அகர்வால் ஆகிய மூவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் இம்மூவரும்  நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களின் பவுன்சர்களையும் வேகத்தையும் சமாளிக்க முடியாமல் திணறியது தெளிவாகத் தெரிந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon