வெற்றி வாய்ப்பை இழந்த உல்வ்ஸ்

உல்வர்ஹேம்டன்: இங்கிலிஷ் பிரிமியர் காற்பந்து லீக்கில் உல்வர்ஹேம்டன் வான்டரர்ஸ் (உல்வ்ஸ்), லெஸ்டர் சிட்டி குழுக்கள் நேற்று அதிகாலை பொருதிய ஆட்டம் ஒன்று கோல் இன்றி சமநிலை கண்டது.

உல்வ்ஸ் குழுவின் சொந்த அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உல்வ்ஸ் வென்றிருக்க வேண்டியது. 

ஆட்டத்தின் முதல் பாதியில் இடைவேளை நெருங்கிக்கொண்டிருந்தபோது உல்வ்ஸ் தரப்பில் கார்னர் கிக் மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி வில்லி போலி எனும் வீரர் தலையால் முட்டி பந்தை வலைக்குள் புகுத்தினார். எனினும், கோல் விழுவதற்கு முன்பு சக வீரர் தியாகோ ஜோட்டா ‘ஆஃப்சைட்’ நிலையில் இருந்ததால், உல்வ்ஸ் குழுவுக்கு கோல் வழங்க ‘வீஏஆர்’ எனப்படும் உதவிக் காணொளி தொழில்நுட்பம் மறுத்துவிட்டது.

கோல் மறுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த உல்வ்ஸ் குழுவுக்கு ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் சாதகமான நிலை கிடைத்தது. உல்வ்ஸ் வீரர் லியான்டர் டென்டோங்கரைத் தடுக்கி விழ வைத்த லெஸ்டர் சிட்டியின் ஹம்சா சௌத்ரிக்கு இரண்டாவது மஞ்சள் அட்டை காட்டப்பட்டதால் அவர் ஆட்டத்திலிருந்து வெளியேற நேரிட்டது.

ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் உல்வ்ஸ் குழு இருமுறை கோல் போட முயன்றது. கார்னர் கிக் மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ராவுல் ஜிமினேஸ் எனும் வீரர் வலையை நோக்கிப் பந்தைத் தலையால் முட்டினார். எனினும், கோல் இலக்கைவிட்டு பந்து சற்று விலகிச் சென்றது.

ஆட்டத்தின் கடைசி தருணங்களில் மீண்டும் எதிரணி வலையை நோக்கி உல்வ்ஸ் வீரர் அடாமா ட்ரோரே பந்தை அனுப்பினார். லெஸ்டர் கோல்காப்பாளர் அந்த கோல் முயற்சியை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினார்.

இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் லெஸ்டர் சிட்டி மூன்றாவது நிலையிலும் உல்வ்ஸ் குழு ஏழாவது நிலையிலும் உள்ளன.