லண்டன்: சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிக்கு முந்திய சுற்றில், லெப்ஜிக் குழுவால் ஓரங்கட்டப்பட்டாலும் தங்களுடைய சாம்பியன்ஸ் லீக் பயணம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்று கூறியுள்ளார் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவின் நிர்வாகி ஜோசே மொரின்யோ.
தன்னுடைய சொந்த மண்ணில் நடந்த இந்த மறுஆட்டத்தின் முதல் சுற்றில் 1-0 எனத் தோற்றது ஸ்பர்ஸ்.
சிசோகா, சன் ஹுயூங் மின், ஹேரி கேன் இல்லாத நிலையில் ஸ்பர்ஸ் சார்பாக கோல் எதுவும் விழவில்லை.
என்றாலும் ஸ்பர்ஸ் குழுவின் கோல்காப்பாளர் ஹுகோ லோரிஸ், எதிரணியின் பல கோல் முயற்சிகளைச் சிறப்பாக தடுத்து லெப்ஜிக் குழுவின் வெற்றியைத் தடுத்து வந்தார்.
ஆனால் பெனால்டி வாய்ப்பில் லெப்ஜிக் குழுவின் வெர்னர் உதைத்த பந்தைத் தடுக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதற்கிடையே, ஸ்பர்சின் லுகஸ் மௌரா, லோ செல்ஸ்கோவின் கோல் முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
டெலி அலி மாற்று ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டதும் ஸ்பர்ஸ் குழுவின் தோல்விக்குக் காரணம் என்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.
ஆட்டத்திற்குப் பிறகு பேசிய, "இன்னும் முடிவு வரவில்லை. எதிரணி மண்ணில் வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக் முன்னேறுவோம்," என்றார்.
கடந்த பருவ சாம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதிச் சுற்றில் சொந்த மண்ணில் அஜக்ஸ் ஆம்ஸ்டர்டாம் குழுவிடம் 1-0 எனத் தோற்ற ஸ்பர்ஸ், எதிரணி மண்ணில் 3-2 என வென்றது குறிப்பிடத்தக்கது.

