'நியூசிலாந்திற்கு அதிக வெற்றி வாய்ப்பு'

1 mins read

வெலிங்டன்: இந்தியா, நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் துணை தலைவர் ரகானே கூறியுள்ளார்.

இந்த அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "முதல் டெஸ்ட் போட்டி நடக்கும் வெலிங்டன் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமானது. சொந்த மண்ணில் விளையாடும் போது எப்படி பந்துவீசவது, பந்தடிப்பாளரை எப்படி எதிர்கொள்வது என்பது நன்றாக தெரியும்.

"இந்திய அணி வீரர்களும் நியூசிலாந்து மண்ணில் எப்படி விளையாட வேண்டும் என்பதை எளிதில் கற்றுக்கொண்டுள்ளனர்.

"நம் பந்துவீச்சாளர்கள் எந்த மண்ணிலும் விக்கெட்டுகளை கைப்பற்றுவதில் சிறந்தவர்கள். முதல் இன்னிங்சில் 320 ஓட்டங்கள் எடுத்துவிட்டால், எதிரணியை எளிதில் வீழ்த்த வாய்ப்புள்ளது.

"முதலில் பந்துவீச நேர்ந்தால் பந்துவீச்சாளர்களும் தங்கள் மனநிலையைச் சரியாக வைத்து விக்கெட்டுகளை வீழ்த்துவதும் அவசியம். அதேபோல் முதலில் பந்தடிக்க நேர்ந்தால், சூழலை எதிர்கொண்டு ஓட்டங்களைச் சேர்க்க வேண்டும்.

"நியூசிலாந்து ஆடுகளங்கள் 2 நாட்களுக்குப் பின் பந்தடிப்பிற்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால், சுழற்பந்து வீச்சாளர்கள் பணி மிகவும் முக்கியம்," என்றார். ரகானே தனது முதல் சதத்தைப் பதிவு செய்தது இதே மண்ணில் என்பது குறிப்பிடத்தக்கது.