வெலிங்டன்: நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மளமளவென விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.
மழையால் தேநீர் இடைவேளைக்குப் பிந்திய ஆட்டம் ரத்தான நிலையில், அதற்கு முன்பாகவே இந்திய அணி முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை மட்டும் எடுத்துள்ளது.
இந்திய அணியில் அனுபவ விக்கெட் காப்பாளர் ரித்திமான் சாஹா சேர்க்கப்படாமல் இளம் வீரர் ரிஷப் பன்டுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் அறிமுக வீரராகக் களம் கண்டார். அத்துடன், அவ்வணியின் மூத்த வீரர் ரோஸ் டெய்லருக்கு இது நூறாவது டெஸ்ட் போட்டி. மூவகை கிரிக்கெட்டிலும் நூறு போட்டிகளில் ஆடிய முதல் வீரரும் அவர்தான்.
பூவா தலையாவில் வென்ற நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் இந்திய அணியைப் பந்தடிக்கப் பணித்தார்.
இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷாவும் மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். 16 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பிருத்வியை வெளியேற்றி, இந்திய அணியின் விக்கெட் சரிவைத் தொடங்கி வைத்தார் டிம் சௌத்தி. அதன்பின் புஜாரா (11), கோஹ்லி (2), விஹாரி (7) ஆகியோரை வெளியேற்றி, அதிர்ச்சி அளித்தார் ஜேமிசன். தொடர்ந்து அகர்வாலும் 34 ஓட்டங்களுக்கு நடையைக் கட்டினார்.
ரகானே மட்டும் நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சைத் தாக்குப் பிடித்து ஆடினார். அவர் 38 ஓட்டங்களுடனும் பன்ட் 10 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் வழக்கமான நேரத்தில் தொடங்கும் என்றாலும் 98 ஓவர்கள் வீசப்பட்டாக வேண்டும்.

