கிளோப்: வெற்றியின் பாதைக்குத் திரும்புவோம்

லிவர்பூல்: சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் காற்பந்து ஆட்டத்தில் ஸ்பெயினின் அட்லெட்டிகோ மட்ரிட்டிடம் லிவர்பூல் 1-0 எனும் கோல் கணக்கில் தோற்றது. பல ஆட்டங்களுக்குப் பிறகு அதுவே லிவர்பூல் சந்தித்த முதல் தோல்வியாகும்.

இந்நிலையில், அட்லெட்டிகோவிடம் தோல்வி அடைந்ததை அடுத்து, வெற்றியின் பாதைக்குத் திரும்ப தமது வீரர்கள் முனைப்புடன் இருப்பதாக லிவர்பூலின் நிர்வாகி யர்கன் கிளோப் தெரிவித்துள்ளார். இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் லிவர்பூல் அடுத்ததாக வெஸ்ட் ஹேம் குழுவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் நாளை மறுநாள் லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கத்தில் நடைபெறு கிறது. லீக் பட்டியலில் 76 புள்ளிகள் பெற்று லிவர்பூல் முதலிடம் வகிக்கிறது. இம்முறை லீக் பட்டத்தை லிவர்பூல் கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. 

“வெற்றியின் பாதைக்கு நாங்கள் திரும்ப வேண்டும். இது அனைத்துப் போட்டிகளுக்கும் பொருந்தும். சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிக்கு முந்திய ஆட்டத்தின் இரண்டாவது சுற்றில் வெற்றிக்குக் குறிவைத்து அட்லெட்டிகோ களமிறங்கும். ஆனால் வெற்றிகள் மூலம் கிடைக்கும் அந்த உணர்வை நாங்கள் இன்னும் மறக்கவில்லை. இதற்குமுன் நாங்கள் பல ஆட்டங்ளில் தொடர்ந்து வெற்றி பெற்றோம். இது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். எனவே நாங்கள் மீண்டும் வெற்றியை ருசிக்க அதற்கான சரியான பாதையில் மீண்டும் செல்ல வேண்டும்,” என்றார் கிளோப். லீக் பட்டியலில் கடைசி மூன்று இடங்களில் வரும் குழுக்களில் ஒன்றாக அடுத்த பருவத்தில் இரண்டாம் நிலை லீக் போட்டிக்குத் தள்ளப்படும் அபாயத்தை வெஸ்ட் ஹேம் எதிர்கொள்கிறது. கடந்த மாதம் லண்டனில் லிவர்பூலைச் சந்தித்த வெஸ்ட் ஹேம் 2-0 எனும் கோல் கணக்கில் தோற்றது. லிவர்பூலின் கோல்களை முகம்மது சாலாவும் அலெக்ஸ் ஆக்ஸ்லேட் சேம்பர்லேனும் போட்டனர்.