தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய ஆஸ்திரேலியா

தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய ஆஸ்திரேலியா

1 mins read

ஜோகனஸ்பர்க்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி ஜோகனஸ்பர்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

பூவா தலையாவில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பந்தடித்தது. அணித் தலைவர் ஏரோன் ஃபிஞ்ச் 42 ஓட்டங்களிலும் ஸ்டீவன் ஸ்மித் 45 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளுக்கு 196 ஓட்டங்கள் எடுத்தது.

தென்னாப்பிரிக்கா சார்பில் ஸ்டெயின், ஷம்சி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 197 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா களமிறங்கியது.

ஆனால் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் சிக்கி மளமளவென விக்கெட்டுகளை இழந்து திணறியது.

குறிப்பாக, ஆஷ்டன் அகர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தியதுடன் 5 விக்கெட்டுகளையும் சாய்த்தார். பேட் கம்மின்ஸ், சம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இறுதியில், தென்னாப்

பிரிக்கா 14.3 ஓவர்களில் 89 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.