பின்னடைவைப் பின்னுக்குத் தள்ளி வைத்த மேன்சிட்டி

பின்னடைவைப் பின்னுக்குத் தள்ளி வைத்த மேன்சிட்டி

2 mins read
fad1b76f-9d95-486e-834a-7c15d25a7a47
மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக்குழுவின் கேப்ரியல் ஜீசஸ் (இடது), லெஸ்டர் சிட்டியின் கிறிஸ்டியன் புச். படம்: ராய்ட்டர்ஸ் -

லெஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் காற்பந்து லீக்கில் (இபிஎல்) நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் லெஸ்டர் சிட்டி குழுவை 1-0 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி வீழ்த்தியது. ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் தாக்குதல் வீரர் கேப்ரியல் ஜேசுஸ் போட்ட ஒரே கோல் மேன்சிட்டிக்கு வெற்றியைத் தந்தது.

இந்த முக்கிய வெற்றியின் மூலம் லீக் பட்டியலில் இரண்டாவது நிலையை மேன்சிட்டி வலுவாக்கிக்கொண்டுள்ளது. பட்டியலில் மூன்றாவது நிலையில் உள்ள லெஸ்டர், மேன்சிட்டியைவிட ஏழு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது.

நிதி முறைகேடு காரணமாக பிரசித்திபெற்ற சாம்பியன்ஸ் லீக், யூரோப்பா லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு மேன்சிட்டிக்கு கடந்த வாரம் ஈராண்டுகால தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த முடிவு நிர்வாகி பெப் கார்டியோலாவுக்கும் அக்குழு வீரர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனினும், குழுவுக்கு ஏற்பட்டு உள்ள பின்னடைவைப் பின்னுக்குத் தள்ளிவைத்த மேன்சிட்டி வீரர்களுக்கு, பிரிமியர் லீக்கில் சிறந்த குழுக்களில் ஒன்றான லெஸ்டர் சிட்டியைத் தோற்கடித்திருப்பது ஆறுதலைத் தந்திருக்கும்.

அதிரடியாக நடந்த இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் லெஸ்டர்தான் முதல் கோலைப் போட்டிருக்க வேண்டும். எனினும், நட்சத்திர ஆட்டக்காரர் ஜேமி வார்டி உதைத்த பந்து கோல்கம்பத்தைத் தொட்டு திரும்பிவிட்டது.

லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கும் லிவர்பூலுக்கும் மேன்சிட்டிக்கும் இடையிலான புள்ளி வித்தியாசம் 19 புள்ளிகள்.

செல்சி வெற்றி

நேற்று முன்தினம் பின்னிரவு நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் செல்சி வெற்றி கண்டது.

இந்த வெற்றியின்மூலம் லீக் பட்டியலில் நான்காவது நிலையை செல்சி வலுப்படுத்திக்கொண்டு உள்ளது.

செல்சி தரப்பில் ஒலிவியே ஜிரூ, மார்க்கஸ் ஒலோன்சோ ஆகிய வீரர்கள் கோல் போட்டனர்.

ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் செல்சி வீரர் அந்தோனியோ ருடிகர் தமது குழுவிற்கு எதிராக சொந்த கோல் அடித்தார். அதை அடுத்து, எப்படியாவது இன்னொரு கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்ய முயன்ற ஸ்பர்சுக்கு நேரப் பற்றாக்குறையால் இறுதியில் பலன் கிட்டவில்லை.

செல்சி, ஸ்பர்ஸ் குழுக்களுக்கு இடையிலான புள்ளி வித்தியாசம் நான்கு புள்ளிகள்.