மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலின் ஐந்தாவது இடத்துக்கு மான்செஸ்டர் யுனைடெட் முன்னேறியுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில் வாட்ஃபர்ட் குழுவை அது எளிதில் ஓரங்கட்டியது.
ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் யுனைடெட் அதன் முதல் கோலைப் போட்டது.
கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி அண்மையில் யுனைடெட்டில் இணைந்த புரூனோ ஃபெர்னாண்டஸ் கோலை போட்டார். இடைவேளையின்போது 1-0 எனும் கோல் கணக்கில் யுனைடெட் முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் ஆண்டனி மார்சியால் அனுப்பிய பந்தை வாட்ஃபர்ட் கோல்காப்பாளர் தட்டிவிட்டார்.
ஆனால் பந்து மீண்டும் மார்ஷியாலிடம் சென்றது. அவரிடமிருந்து பந்தைப் பறிக்க வாட்ஃபர்ட் கோல்காப்பாளர் கோல் கோட்டைவிட்டு வெளியேறி அவரை நெருங்கினார். இந்நிலையில், மிகுந்த நிதானத்துடன் பந்தை வலைக்குள் அனுப்பி எதிரணியை அதிர்ச்சியில் உறையவைத்தார் மார்சியால்.
கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது யுனைடெட்டின் மூன்றாவது கோலை கிரீன்வூட் போட்டார்.
யுனைடெட்டுக்கு கோல் போட்டது குறித்து புரூனோ ஃபெர்னாண்டஸ் மகிழ்ச்சி தெரிவித்தார்.
"இதைத்தான் நான் செய்ய விரும்புகிறேன். இதைத்தான் நான் செய்ய வேண்டும்," என்று ஃபெர்னாண்டஸ் தெரிவித்தார்.
சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற நாங்கள் விரும்புகிறோம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த இலக்கை யுனைடெட் அடைய நான் உதவி செய்ய வந்திருக்கிறேன். தொடர்ந்து ஆட்டங்களைக் கைப்பற்ற நான் உதவுவேன்.
"முற்பாதி ஆட்டத்தில் கோல் போட எதிரணிக்கு நாங்கள் தெரியாத்தனமாக வாய்ப்பு கொடுத்தது போல எனக்குத் தெரிந்தது. நேரம் செல்லச் செல்ல கோல் போடுவதற்கான வாய்ப்புகளை நாங்கள் உருவாக்கினோம்.
"புரூனோ ஃபெர்னான்டெஸ் மிகவும் வேகமாக விளையாடக்கூடியவர். அவர் எங்கள் குழுவில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
"அவர் எங்கள் குழுவில் இணைந்திருப்பது அனைவருக்கும் உற்சாகத்தைத் தந்துள்ளது. இனி முக்கியமான ஆட்டங்களில் நாங்கள் களமிறங்க இருக்கிறோம்," என்று யுனைடெட்டின் நிர்வாகி ஒலே குனார் சோல்சியார் கூறினார். மற்றோர் ஆட்டத்தில் எவர்ட்டனை 3-2 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் வீழத்தியது.

