ஆஸ்திரேலியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா

1 mins read

போர்ட் எலிசபெத்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று முன்தினம் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.

பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்தது தென்னாப்பிரிக்கா. தொடக்க பந்தடிப்பாளரான அணித் தலைவர் குவின்டன் டி காக் ஓட்டங்களைக் குவித்தார்.

அவர் 47 பந்துகளில் 70 ஓட்டங்கள் எடுத்தார். வான்டெர் துஸ்சென் 37 ஓட்டங்கள் எடுத்தார். முன்னாள் அணித் தலைவர் டு பிளஸி 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழந்து 158 ஓட்டங்கள் சேர்த்தது.

அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா பந்தடித்தது. ஏரோன் ஃபிஞ்ச் 14 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வார்னருடன் ஸ்டீவன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார்.ஓட்ட எண்ணிக்கை 98 ஓட்டங்களை எட்டியபோது ஸ்டீவன் ஸ்மித் 29 ஓட்டங்ளில் ஆட்டமிழந்தார்.

வார்னர் களத்தில் நின்றும், தென்னாப்பிரிக்க பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். அலெக்ஸ் கேரி 14 ஓட்டங்களிலும் மிட்செல் மார்ஷ் 6 ஓட்டங்களிலும் மேத்யூ வேட் ஓர் ஓட்டத்திலும் வெளியேறினர்.

கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட்டன. 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியால் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 12 ஓட்டங்ள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 8 வெற்றிகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.