இபிஎல்: மீண்டெழுந்த லிவர்பூல்

லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் காற்பந்து லீக்கில் (இபிஎல்) மற்ற குழுக்களால் எட்டி பிடிக்க முடியாத அளவிற்கு முன்னிலை வகிக்கும் லிவர்பூல் குழுவிற்கு நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மற்றொரு வெற்றி கிட்டியது. பட்டியலில் கீழ்நிலையில் உள்ள வெஸ்ட் ஹேம் குழுவை 3-2 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் போராடி வென்றது.

இந்த ஆட்டத்தில் லிவர்பூலுக்கு அவ்வளவு எளிதாக வெற்றி கிடைக்கவில்லை. ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்தில் முதல் கோலை ஜார்ஜினியோ வைனால்டம் போட்டாலும் அதையடுத்து மூன்றே நிமிடங்களில் வெஸ்ட் ஹேம் குழு, தனது தரப்பிற்கு கோல் போட்டு சமன் செய்தது.

லிவர்பூலின் சொந்த அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் அடுத்த கோலையும் வெஸ்ட் ஹேம் குழுதான் போடும் என பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், 2-1 கோல் எண்ணிக்கையில் வெஸ்ட் ஹேம் முன்னிலை வகித்தது. எனினும், வெஸ்ட் ஹேம் கோல்காப்பாளர் லுக்கஸ் ஃபேபியான்ஸ்கி இருமுறை செய்த தவற்றால் தோல்வியில் விளிம்பிலிருந்து லிவர்பூல் தப்பியது.

லிவர்பூலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கோல்களை முறையே முகம்மது சாலாவும் சாடியோ மானேவும் போட்டு லிவர்பூலுக்கு மற்றுமொரு வெற்றியைத் தேடித் தந்தனர். 2017ஆம் ஆண்டில் மான்செஸ்டர் சிட்டி தொடர்ச்சியாக 18 லீக் ஆட்டங்களில் வென்று சாதனை படைத்திருந்தது. இப்போது அந்தச் சாதனையைச் சமன் செய்துள்ளது லிவர்பூல்.

முப்பது ஆண்டுகளில் முதன்முறையாக லீக் பட்டத்தை வெல்ல, நடப்பு லீக் பருவத்தில் எஞ்சியுள்ள 11 ஆட்டங்களில் லிவர்பூலுக்கு 12 புள்ளிகள் மட்டுமே தேவை.

ஐந்து கோல்கள் நிறைந்த வெஸ்ட் ஹேம் குழுவுடனான விறுவிறுப்பான ஆட்டத்தில் கிடைத்த வெற்றி சிறப்பானது என லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப் கருத்துரைத்துள்ளார்.

“ஆட்டத்தை நாங்கள் நல்லபடியாக தொடங்கி, முதல் கோலை அற்புதமாக போட்டோம். எனினும், அதன் பிறகு லிவர்பூல் வீரர்களின் வேகம் சற்று குறைந்துவிட்டது. வெற்றி பெற, நம்பிக்கையைக் கைவிடாது அயராது போராடினோம். இறுதியில் பலன் கிட்டியது,” என்று அவர் கூறினார்.

லீக் பட்டியலில் இரண்டாவது நிலையில் உள்ள மேன்சிட்டியைவிட 22 புள்ளிகள் கூடுதலாக பெற்றுள்ள லிவர்பூல், அசைக்க முடியாத அளவுக்கு முன்னிலை வகிக்கிறது.