மூன்று வகை ஆட்டங்களிலும் சதமடித்த முதல் வீராங்கனை ஹேதர் நைட்

மூன்று வகை ஆட்டங்களிலும் சதமடித்த முதல் வீராங்கனை ஹேதர் நைட்

1 mins read
0018a5b1-a5a3-4fa6-8314-4835be412e07
ஆடவர், மகளிர் கிரிக்கெட் என இரண்டு பிரிவிலும் மூவகை ஆட்டங்களிலும் சதமடித்த முதல் இங்கிலாந்து விளையாட்டாளர் என்ற சாதனை படைத்த ஹேதர் நைட் (வலது). படம்: ஏஎப்பி -

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான 20 ஓவர் உலகக் கிண்ணத் தொடரின் ஆட்டமொன்றில், இங்கிலாந்து, தாய்லாந்து அணிகள் மோதின.

முதலில் பந்தடித்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஓட்டமெதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த நடாலி ஷீவர் மற்றும் அணித் தலைவர் ஹேதர் நைட் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஹேதர் நைட் 66 பந்துகளில் 13 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் விளாசி 108 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர் போட்டியில் ஹேதர் நைட் அடித்த முதல் சதம் இதுவாகும்.

இதையடுத்து, 20 ஓவர், ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என மூன்று வகை ஆட்டத்திலும் சதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.

மேலும் ஆடவர், மகளிர் கிரிக்கெட் என இரண்டு பிரிவைச் சேர்த்து பார்த்தாலும் மூன்று வகை ஆட்டத்திலும் சதமடித்த முதல் இங்கிலாந்து விளையாட்டாளர் என்ற பெருமையும் இவரைச் சேர்ந்துள்ளது.

நடாலி ஷீவரும் சிறப்பாக விளையாடி 52 பந்துகளில் 59 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் 177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் விளையாடிய தாய்லாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 78 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.