மனந்தளராது போராடி வென்ற மேன்சிட்டி

மட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டத்தில் ரியால் மட்ரிட்டை அதன் சொந்த மண்ணில் 2-1 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி நேற்று அதிகாலை வீழ்த்தியது.

ஆட்டம் தொடங்கியதிலிருந்து சிட்டி தாக்குதலில் ஈடுபட்டது. இருப்பினும், ரியாலின் தற்காப்பு அரணை அதனால் முறியடிக்க முடியாமல் போனது. இடைவேளையின்போது ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தது.

பிற்பாதி ஆட்டம் தொடங்கி ஏறத்தாழ 15 நிமிடங்களில் சிட்டியின் தற்காப்பாளர்கள் செய்த தவற்றைப் பயன்படுத்தி தீடீர் தாக்குதல் நடத்திய ரியால் கோல் போட்டு முன்னிலை வகித்தது.

இந்தப் பின்னடைவைக் கண்டு சிறிதும் மனந்தளராது தொடர்ந்து தாக்குதல்களை நடத்திய சிட்டிக்கு கைமேல் பலன் கிட்டியது. 

78வது நிமிடத்தில் கேப்ரியல் ஜேசுஸ் தலையால் முட்டிய பந்து வலையைத் தொட்டது. ஆட்டத்தைச் சமன்செய்த பிறகும் சிட்டியின் கோல் பசி தீர்ந்தபாடில்லை. ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் சிட்டிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்தி கெவின் டி பிரய்ன கோல் போட்டார். ஆட்டத்தின் 86வது நிமிடத்தில் ரியாலின் செர்ஜியோ ரமோசுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது. அதனால் அவர் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன் விளைவாக சிட்டியின் விளையாட்டரங்கத்தில் நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் அவர் களமிறங்க முடியாது. முதல் ஆட்டத்தை 2-1 எனும் கோல் கணக்கில் சிட்டி கைப்பற்றியபோதிலும் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவது நிச்சயம் என்று மெத்தனப்போக்குடன் ரியாலுக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் களமிறங்கக்கூடாது என்று சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியோலா தமது வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மற்றோர் ஆட்டத்தில் இத்தாலியின் யுவென்டஸ் குழுவை 1-0 எனும் கோல் கணக்கில் பிரான்சின் லியோன் தோற்கடித்தது.

ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் லியோனின் டௌசார்ட் கோல் போட்டு யுவென்டசை அதிர்ச்சியில் உறைய வைத்தார். யுவென்டசால் இறுதி வரை ஆட்டத்தைச் சமன்செய்ய முடியாமல் போக, எதிர்பாராத வெற்றியை லியோன் பதிவு செய்தது. தமது குழு கூடுதலாக ஒரு கோல் போட்டிருந்தால் காலிறுதி வாய்ப்பு இன்னும் பிரகாசமாக இருந்திருக்கும் என்று லியோனின் நிர்வாகி ருடி கார்சியா தெரிவித்தார்.