அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

2 mins read
aac050b5-0644-431a-a35c-0b515345cd51
‌மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற நியூசிலாந்துடனான மூன்றாவது ஆட்டத்தில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த இந்திய அணியின் வீராங்கனை ‌ஷபாலி வர்மாதான். இவர் 46 ஓட்டங்கள் எடுத்தார். படம்: ஏஎஃப்பி -

மெல்பர்ன்: மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

இந்திய அணி மூன்றாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை நேற்று எதிர்கொண்டது.

முதலில் பந்தடித்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ஓட்டங்கள் எடுத்தது.

‌இந்திய அணியில் அதிகபட்சமாக ஷபாலிவர்மா 46 ஓட்டங்கள் எடுத்தார்.

இதில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடங்கும். 134 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது.

முதல் மூன்று விக்கெட்டுகள் மளமளவென சரிந்தபோதிலும், அடுத்து வந்த மடி கிரின் 24 ஓட்டங்களும் மார்டின் 25 ஓட்டங்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

கடைசி 6 பந்துகளில் 16 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது.

ஷிகா பாண்டே வீசிய 5 பந்து களில் நியூசிலாந்து 11 ஓட்டங்கள் எடுத்தது.

கடுமையான போட்டிக்குப் பிறகு இந்திய அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணிக்காக கடைசி வரை போராடிய அமெலியா கெர் 19 பந்துகளில் 36 ஓட்டங்கள் (6 பவுண்டரிகள்)எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இந்தியாவை எப்படியும் தோற்கடித்துவிடலாம் என்ற முனைப்புடன் விளையாடிய அவர், தோல்வியடைந்த ஏமாற்றத்தில் அழுதுகொண்டே மைதானத்தைவிட்டு வெளியேறினார்.

ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஷபாலி வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடும் தூரத்தில் கிண்ணம் இருப்பதால் இந்திய மகளிர் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றனர்.