கரபாவ் கிண்ணம் மீண்டும் மான்செஸ்டர் சிட்டி வசம்

1 mins read
4146e248-7aa3-457e-b1e5-c590c6580613
லீக் கிண்ணத்தை முத்தமிடும் பெப் கார்டியோலா. படம்: இபிஏ -

லண்டன்: லீக் கிண்ணம் எனப்படும் கரபாவ் கிண்ண இறுதிச் சுற்று காற்பந்து ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் நேற்று வென்ற மான்செஸ்டர் சிட்டி, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக கிண்ணத்தை வென்றுள்ளது.

ஆட்டத்தின் முதல் 30 நிமிடங்களில் செர்ஜியோ அகுவேரோ, ரோட்ரி ஆகியோர் ஆளுக்கு ஒரு கோலைப் போட்டு மேன்சிட்டிக்கு வலுவான முன்னிலையைத் தந்தனர்.

எனினும், மேன்சிட்டி தற்காப்பு ஆட்டக்காரர் ஜான் ஸ்டோன்ஸ் திடலில் வழுக்கி விழுந்ததைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்ட வில்லா வீரர் இம்வானா சமாட்டா, பந்தைத் தலையால் முட்டி ஒரு கோலைப் போட்டு கோல் இடைவெளியைக் குறைத்தார்.

எனினும், அதன் பிறகு வில்லா மேற்கொண்ட முயற்சிகள் அனைத்திற்கும் பலன் கிட்டாத நிலையில், வெற்றியையும் கிண்ணத்தையும் மேன்சிட்டி தன்வசமாக்கிக்கொண்டது.

மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேன்சிட்டி வீரர்களுக்கு நிர்வாகி பெப் கார்டியோலா பாராட்டு மழை பொழிந்துள்ளார்.

கடைசியாக ஏழு பருவங்களில் ஐந்து முறை லீக் கிண்ணத்தை மேன்சிட்டி வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுவும், லீக் கிண்ணப் போட்டியை மேன்சிட்டி தொடர்ச்சியாக மூன்று முறை வென்றிருப்பது 1984ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவே முதன்முறை. 1981 முதல் 1984 வரை லீக் கிண்ணத்தைத் தொடர்ச்சியாக நான்கு முறை லிவர்பூல் வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது.