போலி கடப்பிதழில் பராகுவே சென்ற ரொனால்டினோ கைது

போலி கடப்பிதழில் பராகுவே சென்ற ரொனால்டினோ கைது

1 mins read
ab329be6-104f-49fe-a48f-71b4451c2ffe
ரொனால்டினோ (இடது) மற்றும் அவரின் சகோதரர் ரொபர்ட்டோவின் கடப்பிதழ்களைச் சோதிக்கும் பராகுவே அதிகாரிகள். படம்: இபிஏ -

அசுன்சியோன்: பிரேசில் முன்னாள் காற்பந்து நட்சத்திரமான ரொனால்டினோ போலி கடப்பிதழைப் பயன்படுத்தியதாகக் கூறி, பராகுவேயில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2002ஆம் ஆண்டில் உலகக் கிண்ணம் வென்ற பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்த 39 வயதான ரொனால்டினோ, தம்முடைய சகோதரர் ரொபர்ட்டோவுடன் ஹோட்டல் ஒன்றில் வைத்து நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டதாக பராகுவே உள்துறை அமைச்சு தெரிவித்தது.

அவர்கள் இருவரும் பராகுவே நாட்டின் கடப்பிதழ்களை வைத்து இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

2018ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அபராதம் காரணமாக ரொனால்டினோவிடம் தற்போது பிரேசில் கடப்பிதழ் இல்லை. நிரந்தர பாதுகாப்புப் பகுதியான பிரேசிலின் குவைபா ஏரியில் ரொனால்டினோவும் ரொபர்ட்டோவும் உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக மீன்பிடிப் பொறியை அமைத்ததாகக் கூறப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 2018 நவம்பரில் சகோதரர்கள் இருவருக்கும் 8.5 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

பிரேசிலைவிட்டு வெளியேற முடியாதபோதும் கடந்த செப்டம்பரில் அந்நாட்டின் சுற்றுலாத் துறை தூதுவர்களில் ஒருவராக ரொனால்டினோ அறிவிக்கப்பட்டார்.