இறுதிப் போட்டியில் இந்திய மகளிர்

இறுதிப் போட்டியில் இந்திய மகளிர்

1 mins read
41c1c1a5-cbed-4953-8eaf-1cc66fa750de
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதன்முறையாக டி20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. படத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் ரிச்சா கோ‌ஷ் (வலது). படம்: ஏஎப்பி -

சிட்னி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதன்முறையாக டி20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சிட்னியில் நேற்று நடக்கவிருந்த முதலாவது அரையிறுதிப் போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது. மாற்று நாள் ஒதுக்கப்படவில்லை என்பதால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஏனெனில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி, தான் ஆடிய நான்கு ஆட்டங்களிலும் வென்று எட்டுப் புள்ளிகளைப் பெற்றது. மாறாக, 'பி' பிரிவில் இடம்பெற்ற இங்கிலாந்து அணியோ மூன்று ஆட்டங்களில் வென்று ஆறு புள்ளிகளை மட்டும் பெற்று இருந்தது.

போட்டிக்குப் பின் பேசிய இந்திய அணித் தலைவர் ஹர்மன்பிரீத் கவுர், "போட்டி நடக்காமல் போனது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், விதிமுறை என்று வந்துவிட்டால் எல்லாரும் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். எதிர்காலத்தில் முக்கிய ஆட்டங்களுக்கு மாற்று நாள் ஒதுக்கினால் சிறப்பாக இருக்கும்," என்றார்.

தங்களது அணி உலகக் கிண்ணத் தொடரைவிட்டு இப்படியொரு நிலையில் வெளியேற நேர்ந்தது உண்மையிலேயே விரக்தி அளிப்பதாக உள்ளது என்றார் இங்கிலாந்து அணித்தலைவர் ஹெதர் நைட்.

நேற்று நடந்த இன்னோர் அரையிறுதியில் 'பி' பிரிவில் முதலிடம் பிடித்த தென்னாப்பிரிக்க அணியும் 'ஏ' பிரிவில் இரண்டாமிடம் பிடித்த ஆஸ்திரேலிய அணியும் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி ஐந்து ஓட்ட வித்தியாசத்தில் வென்று இறுதிச் சுற்று வாய்ப்பைக் கைப்பற்றியது.

இறுதிப் போட்டி நாளை மறுநாள் மெல்பர்னில் நடைபெறும்.