லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டி ஒன்றில் நேற்று அதிகாலை டர்பி கவுண்டி குழுவை மான்செஸ்டர் யுனைடெட் குழு எதிர்கொண்டது. இதில் யுனைடெட்டில் தற்காலிக ஏற்பாடாக புதுவரவாக வந்திருக்கும் ஒடியோன் இகாலோ இரண்டு கோல்கள் போட்டு யுனைடெட்டின் வெற்றிக்கு உதவியுள்ளார்.
இதற்கு முன் யூரோப்பா லீக் கிண்ணப் போட்டி ஒன்றில் புருஜ் என்ற குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் கோலைப் போட்ட இகாலோ நேற்றும் தமது திறமையை வெளிப்படுத்தினார்.
கோல் போட்ட வெற்றிப் பெருமிதத்தில், "என் மீது சக வீரர்கள், எனது முதலாளிகள், எனது ரசிகர்கள் அனைவரும் நம்பிக்கை வைத்துள்ளவரை நான் மற்றவர்கள் சொல்வதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை, நான் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பேன்.
"இந்த வெற்றி தொடர பாடுபட்டு இந்தப் பருவத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழு சிறப்பாகச் செய்வதை நாங்கள் உறுதி செய்வோம்," என்று கூறினார்.
மான்செஸ்டர் யுனைடெட் எதிர்த்து விளையாடிய டர்பி குழுவில் முன்னாள் யுனைடெட் நட்சத்திர வீரரான வெய்ன் ரூனி களமிறங்கி சலசலப்பை ஏற்படுத்தியபோதும் யுனைடெட் 3-0 என வெற்றி பெறுவதை அவரால் தடுக்க முடியவில்லை.
டர்பி கவுண்டிக்கு கிடைத்த இரண்டு ப்ரீகிக் வாய்ப்புகளை பயன்படுத்தி ரூனி எடுத்த கோல் போடும் முயற்சிகளை யுனைடெட் கோல்காப்பாளர் செர்ஜியோ ரொமேரோ தடுத்தார்.
இது ஒருபுறமிருக்க, ஆட்டத்தின் 31ஆம் நிமிடத்தில் யுனைடெட் தற்காப்பு வீரர் லுக் ஷா முதல் கோலை போட்டவுடன் டர்பி கவுண்டியின் தற்காப்பு அரண் சரிந்தது. அதன்பின் ஆட்டத்தின் 41, 70ஆம் நிமிடங்களில் இகாலோ போட்ட கோல்களால் டர்பி மீண்டு எழ முடியாமல் தத்தளித்ததாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.
நேற்றைய ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவுக்கு 253 கோல்கள் போட்டு சாதனையாளராக விளங்கும் வெய்ன் ரூனியால் முன்போல் வேகமாக ஓட முடியாவிட்டாலும் திடலின் மத்தியப் பகுதியிலிருந்து, சக வீரர்களை நோக்கி, நீண்டதூரத்திற்கு அவர் இரு முறை உதைத்த பந்து டர்பி கவுண்டிக்கு அருமையான கோல் போடும் வாய்ப்புகளாக அமைந்ததாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன. எனினும் அந்த வாய்ப்புகளை டர்பி சரிவரப் பயன்படுத்திக் கொள்ள தவறியதாகக் கூறப்படுகிறது. நேற்றைய ஆட்டத்தின் ஆட்டநாயகனாக யுனைடட்டின் லுக் ஷா விளங்கினார். எனினும், இரு கோல்கள் போட்ட இகாலோவை பாராட்ட யுனைடெட் நிர்வாகி சோல்சியார் தவறவில்லை.
"யுனைடெட் குழுவில் சிலர் காயமடைந்துள்ள நிலையில் இகாலோவை பயன்படுத்திக் கொள்ள முடிவது பெருமைக்குரியது.
"இகாலோ வித்தியாசமான தாக்குதல் ஆட்டக்காரர் என்பதுடன் அவர் சில அருமையான கோல்களையும் போடுகிறார். அவர் போட்ட முதல் கோல் போல் பலரால் போட முடியாது," என்று கூறினார்.

