இடைவெளியைக் குறைத்த ஆர்சனல்

2 mins read
9fe185c6-c027-4f4b-8229-84e27f0a94f0
பந்து உன்வசமா என்வசமா என்ற போராட்டத்தில் ஆர்சனல் குழுவின் ஒபமெயாங்கும் (வலது) வெஸ்ட் ஹேம் யுனைடெட் குழுவின் ஜெரமி இங்கக்கியாவும். படம்: ராய்ட்டர்ஸ் -

லண்டன்: பிற்பாதியில் மாற்று ஆட்டக்காரராக வந்த அலெக்சாண்டர் லக்கஸெட் மூலம் ஒற்றை கோலால் ஆர்சனல் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் ஹேம் யுனைடெட் காற்பந்துக் குழுவை வீழ்த்தியது.

இதன்மூலம் பிரிமியர் லீக்கில் கடைசியாகத் தான் ஆடிய எட்டு ஆட்டங்களிலும் தோல்வியைச் சந்திக்காத குழுவாக ஆர்சனல் வீறுநடை போட்டு வருகிறது.

அத்துடன், பட்டியலின் நான்காமிடத்தில் உள்ள செல்சிக்கும் ஒன்பதாம் இடத்தில் இருக்கும் ஆர்சனலுக்கும் இடையிலான புள்ளி வித்தியாசம் ஐந்தாகக் குறைந்துள்ளது. இதன்மூலம் கடந்த இரு பருவங்களாகக் கை நழுவிய சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பை இம்முறை எப்பாடுபட்டேனும் கைப்பற்றுவது என ஆர்சனல் குழு கங்கணம் கட்டி வருகிறது.

லக்கஸெட் 79வது நிமிடத்தில் உதைத்த பந்து வலைக்குள் புகுந்தபோதும் அதை கோல் என ஒப்புக்கொள்ள கள நடுவர் மறுத்தார். ஆனாலும், காணொளி உதவி நடுவர் தொழில்நுட்பம் தமது முடிவை தவறெனத் தெளிவுபடுத்தியதால், கள நடுவர் தமது முடிவை மாற்றி 'அது கோல்தான்' என அறிவித்தார்.

முன்னதாக நடந்த ஆட்டத்தில் முதலில் கோலை விட்டுக் கொடுத்தபோதும் முகம்மது சாலா, சாடியோ மானே ஆகியோர் கைகொடுக்க, பட்டியலின் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல் 2-1 என போர்ன்மத்தை வீழ்த்தியது. சொந்த ஆன்ஃபீல்ட் அரங்கில் லிவர்பூல் குழு தொடர்ச்சியாக வென்ற 22வது ஆட்டம் இது. அத்துடன், அந்த அரங்கில் அக்குழு கடைசியாக விளையாடிய 55 லீக் ஆட்டங்களிலும் தோற்றதே இல்லை என்பது இன்னும் சிறப்புக்குரியது.

மாறாக, ஸ்பர்ஸ் குழு வெற்றியை ருசித்து ஐந்து ஆட்டங்களாகிவிட்டன. பர்ன்லி-ஸ்பர்ஸ் குழுக்கள் நேற்று அதிகாலை மோதிய ஆட்டம் 1-1 எனச் சமநிலையில் முடிந்தது. செயின்ட் மேக்சிமின் போட்ட அற்புதமான கோலால் நியூகாசல் யுனைடெட் 1-0 என சௌத்ஹேம்டனைத் தோற்கடித்தது.