இறுதியில் சறுக்கிய இந்தியா

இறுதியில் சறுக்கிய இந்தியா

2 mins read
8060be15-7b5f-4999-909a-3ed58a3af1e3
கிண்ணத்தை வெல்ல முடியாமல் போன சோகத்தில் இந்திய அணி வீராங்கனைகள். படம்: ஏஎஃப்பி -

மெல்பர்ன்: முதன்முறையாக டி20 உலகக் கிண்ணத்தை வெல்வதற்குக் கிடைத்த அருமையான வாய்ப்பை இந்திய மகளிர் அணி நழுவவிட்டது.

தொடரின் முதல் ஆட்டத்தில் தான் வீழ்த்திய அதே ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி இறுதிப் போட்டியில் 85 ஓட்ட வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது.

மொத்தம் பத்து அணிகள் இரு பிரிவுகளாகப் பங்கேற்ற இந்தத் தொடரில் 'ஏ' பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

மெல்பர்னில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பூவா தலையாவில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்தடித்தது. தொடக்க இணையான அலிசா ஹீலியும் பெத் மூனியும் இந்திய வீராங்கனைகளின் பந்துகளை வெளுத்து வாங்கினர். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 11.4 ஓவர்களில் 115 ஓட்டங்களைக் குவித்தனர். 39 பந்துகளில் ஐந்து சிக்சருடன் 75 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார் ஹீலி. 54 பந்துகளில் 78 ஓட்டங்களைக் குவித்து மூனி இறுதி வரை களத்தில் நிற்க, ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்களை எடுத்தது.

கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணியில் மலையென நம்பியிருந்த 16 வயது ஷஃபாலி வர்மா இரண்டு ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். தீப்தி சர்மா (33 ஓட்டங்கள்) மட்டுமே சற்று நேரம் தாக்குப்பிடித்தார். மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, இந்திய அணி 19.1 ஓவர்களில் 99 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வி கண்டது.

ஆட்ட நாயகியாக அலிசா ஹீலியும் தொடர் நாயகியாக பெத் மூனியும் அறிவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றி சாதித்த ஆஸ்திரேலிய மகளிரணி, ஒட்டுமொத்தத்தில் கிண்ணத்தை வென்றிருப்பது இது ஐந்தாவது முறை.