கோல்காப்பாளரால் வீழ்ந்த மான்செஸ்டர் சிட்டி

கோல்காப்பாளரால் வீழ்ந்த மான்செஸ்டர் சிட்டி

2 mins read
f8bc203c-45d4-4f11-a39e-6b03c5dee017
ஆட்டத்துக்குப் பிறகு சோகமே உருவாக திடலைவிட்டு மிகுந்த ஏமாற்றத்துடன் வெளியேறும் மான்செஸ்டர் சிட்டியின் கோல்காப்பாளர் எடர்சன். அவர் செய்த தவற்றைப் பயன்படுத்தி மான்செஸ்டர் யுனைடெட் தனது இரண்டாவது கோலைப் போட்டு வெற்றியை உறுதி செய்தது. படம்: ராய்ட்டர்ஸ் -

மான்செஸ்டர்: மான்செஸ்டர் சிட்டி குழுவுடன் மோதும்போது மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டங்கள் எப்பொழுதுமே விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும். அத்துடன், இந்த இரு குழுக்களும் மோதும் சர்ச்சைக்கு குறைவு இருக்காது.

நேற்று முன்தினம் பின்னிரவு இவ்விரு குழுக்களிடையே நடைபெற்ற ஆட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஆட்டத்தை முனைப்புடன் தொடங்கிய மான்செஸ்டர் சிட்டி குழு, மத்திய திடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை செலுத்தியது. பின்னர் தட்டுத் தடுமாறி நிலைமையை சமாளிக்க ஆரம்பித்த மான்செஸ்டர் யுனைடெட் குழுவுக்கு ஆட்டத்தின் 30ஆம் நிமிடத்தில் ப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது.

அதை யுனைடெட் குழு பயன்படுத்தி தனது முதல் கோலை போட்ட விதமே அதன் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தது, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் வாயை பிளக்க வைத்தது.

திடலின் இடப்பக்க ஓரமாக ஆண்டனி மார்சியால் ஒதுங்க, ப்ரீகிக் எடுத்த புருனோ ஃபெர்னாண்டஸ் அவரைக் கண்டுகொள்ளாமல் இருந்தார். பிறகு மின்னல் வேகத்தில் பந்தை தாக்குதல் ஆட்டக்காரர் மார்சியாலை நோக்கி மேலெழுந்த வாரியாக ஃபெர்னாண்டஸ் பந்தை உதைக்க மார்சியாலும் சிட்டியின் தற்காப்பு வீரர்களைத் தாண்டி அதன் கோல்காப்பாளர் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் பந்தை வலையை நோக்கி உதைத்தார். மான்செஸ்டர் சிட்டியின் கோல்காப்பாளருக்கு அருகிலேயே, அவரது வலது கைக்கு எட்டக்கூடிய நிலையில், பந்து வந்தபோதும் அதைத் தடுக்க முடியாமல் கோல்காப்பாளர் எடர்சன் கோல் புக விட்டுவிட்டார்.

இது சிட்டி கோல்காப்பாளரின் தவறுதான் என்றபோதும் மான்செஸ்டர் யுனைடெட் கோல் போட்ட விதம் அனைவரையும் ஈர்த்தது.

இதன் பின் சிட்டி குழு எவ்வளவோ முயன்றும் அதனால் ஆட்டத்தை சமநிலைப்படுத்த முடியவில்லை.

இடையில் மான்செஸ்டர் சிட்டி குழுவின் செர்ஜியோ அகுவேரோ போட்ட கோல் காணொளி உதவி நடுவர் முறை மூலம் பரிசீலனை செய்ததில் அகுவேரோ ஆஃப்சைட் நிலையில் இருந்தார் என்று தீர்மானிக்கப்பட்டு கோல் நிராகரிக்கப்பட்டது. நிலைமை இவ்வாறு கடைசிவரை தொடர, ஆட்டம் கிட்டத்தட்ட முடியும் தறுவாயில், மீண்டும் சிட்டி கோல்காப்பாளர் எடர்சன் தவறு செய்தார்.

பந்தைத் தன் வசம் கொண்டு வந்த எடர்சன் அதை சிட்டி வீரர்களிடம் வீசி எறிவதற்கு பதிலாக நேரே மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ஸ்காட் மெக்டாமினியின் பாதையில் வீசினார். அதையும் தனது கோல் எல்லையிலிருந்து சற்று தூரத்திலிருந்து பந்தை வீசினார்.

பந்து தனது பாதையில் வர, அதேசமயம் சிட்டியின் கோல்காப்பாளர் தனது கோல் எல்லையில் இல்லாததை கவனித்த மெக்டாமினி அதை மிக லாவகமாக பந்தை வலைக்குள் செலுத்தி கோலாக்கினார். இதன்மூலம் மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டத்தை 2-0 என முடிவுக்கு கொண்டு வந்தது.

வெற்றிப் பெருமிதத்தில் பூரித்த யுனைடெட் நிர்வாகி சோல்சியார், "இந்த வீரர்களின் நிர்வாகியாக இருப்பது நான் செய்த பாக்கியம். இவர்கள் தங்கள் சக்தி அனைத்தையும் பயன்படுத்தி விளையாடுகின்றனர்.

"இவர்கள் தாங்கள் அனைவரும் நல்ல வீரர்கள் என்பதை உணர்ந்துள்ளனர். இருந்தும் மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பமுடையவர்கள்," என அவர்களுக்கு புகழாரம் சூட்டினார்.