எவர்ட்டன் வீழ்ச்சியில் குளிர்காயும் செல்சி

எவர்ட்டன் வீழ்ச்சியில் குளிர்காயும் செல்சி

2 mins read
58e60f74-f9ef-492e-bc60-a6c5ba3ab9bf
செல்சியின் முதல் கோல். பந்து வலைக்குள் செல்வதைத் தடுக்க எவர்ட்டன் கோல்காப்பாளர் பிக்ஃபர்ட் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. படம்: ராய்ட்டர்ஸ் -

லண்டன்: இந்தக் காற்பந்துப் பருவத்தில் பலவிதமான கேள்விகளுக்கு ஆளாகியுள்ள செல்சி குழு, நேற்று முன்தினம் எவர்ட்டனை 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியதைத் தொடர்ந்து புத்துயிர் பெற்றுள்ளது.

இதில் செல்சியில் வளர்ந்துவரும் இளம் வீரரான பில்லி கில்மோர், எஃப்ஏ கிண்ணப் போட்டியில் லிவர்பூலை தனது சிறந்த ஆட்டத்தால் செல்சிக்கு வெற்றிக் கனியைப் பறித்துத் தந்த சூட்டோடு, தற்பொழுது செல்சியின் மற்ற வீரர்களுக்கு தனது முனைப்பான ஆட்டத்தால் புத்துயிர் தந்து செல்சி குழு இந்தப் பருவத்தில் இதுவரை காணாத வெற்றியை பெற உதவியுள்ளார் என்று பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.

இவர் முனைப்புடன் விளையாடி யதை எடுத்துக் காட்டும் விதமாக இவர் குறிதவறாமல் 74 முறை பந்தை சக வீரர்களின் பாதையில் செலுத்தினார் என்று கூறப்படுகிறது. அத்துடன், திடல் முழுக்க கிட்டத்தட்ட 12.62 கிலோமீட்டர் தூரம் ஓடியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

தமது ஆட்டம் பற்றிக் கூறும் கில்மோர், "லிவர்பூலுடனான ஆட்டத்திற்குப் பிறகு எங்கள் குழுவினரிடையே ஒரு உத்வேகம் கிளம்பியுள்ளளது.

"இனி இந்த ஆட்டத்தில் காட்டிய வேகத்தை நாம் வாரந்தோறும் இனிவரும் ஆட்டங்களில் காட்ட வேண்டும்," என்று தமது சக வீரர்களுக்கு ஊக்கமூட்டியுள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் மெளண்ட், பெட்ரோ, வில்லியன், ஜிரூ என செல்சி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக கோல் போட செல்சி குழு எவர்ட்டனை வறுத்தெடுத்தது.

செல்சி குழு ஒரு கட்டத்தில் அதன் முன்னணி தாக்குதல் வீரரும் அதிக கோல்களை இதுவரை போட்டவருமான டேமி ஆப்பிரகாமை, அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இழந்தது.

இந்த நேரத்தில்தான் ஒலிவியே ஜிரூ குழுவைவிட்டுப் போய்விடக்கூடிய நிலை, அரிஸாபலாகா என்ற ஆட்டக்காரர் தனது ஆட்டத்திறனில் தீடீர் சரிவு, வில்லியனின் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் சுணக்கம் என பிரச்சினைகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தன.

இப்படியொரு இக்கட்டான சூழலில்தான் செல்சி வீரர்கள் தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தி அண்மையில் எவர்ட்டனின் நிர்வாகியாக பொறுப்பேற்றிருக்கும் கார்லோ அன்சிலோட்டிக்கு மரண அடி கொடுத்துள்ளனர்.

இந்த மாறுதலை செல்சி ரசிகர்களும் கொண்டாடத் தவறவில்லை என்று பிபிசி செய்தி கூறுகிறது.

செல்சி நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ளள முன்னாள் வீரரான ஃபிராங் லாம்பார்ட்டை 'சூப்பர் ஃபிராங்' என்ற அடைமொழியுடன் அவர்கள் அழைக்கத் தொடங்கிஉள்ளனர்.