லிவர்பூல்: சொந்த ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கில் தொடர்ச்சியாக 22 பிரிமியர் லீக் ஆட்டங்களில் வென்றது, 25 புள்ளி முன்னிலையுடன் லீக் பட்டியலில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பது என லிவர்பூல் குழு இந்தப் பருவத்தில் பெரும் ஆதிக்க சக்தியாகத் திகழ்ந்து வருகிறது.
ஆயினும், சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மட்ரிட் குழுவிடம் 0-1, லீக்கில் வாட்ஃபர்ட் குழுவிடம் 0-3, எஃப்ஏ கிண்ண ஐந்தாம் சுற்றில் செல்சியிடம் 0-2 என இரு வாரங்களில் மூன்று ஆட்டங்களில் தோற்றது லிவர்பூலின் சறுக்கல் தொடங்கிவிட்டதோ என எண்ணத் தோன்றியது.
இவ்வேளையில், ஆன்ஃபீல்ட் அரங்கில் கடந்த சனிக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ன்மத் குழுவைத் தோற்கடித்தது லிவர்பூல் குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் சற்று நிம்மதி அளிப்பதாக அமைந்தது.
அட்லெட்டிகோ குழுவிற்கெதிராக நாளை அதிகாலை நடக்கும் சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முந்திய சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் லிவர்பூல் குழு அதேபோன்ற ஒரு செயல்பாட்டை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், முதல் ஆட்டத்தில் தோற்றுவிட்டு, ஆன்ஃபீல்டில் நடக்கும் இரண்டாவது ஆட்டத்தில் எழுச்சியுடன் ஆடி வென்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்ததை கடந்த காலங்களில் லிவர்பூல் பலமுறை செய்து காட்டி இருக்கிறது.
கடந்த பருவ சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் 0-3 என பார்சிலோனாவிடம் தோற்றபோதும் ஆன்ஃபீல்டில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்று லிவர்பூல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நினைவுகூரத்தக்கது.
அதே நேரத்தில், லிவர்பூலிடம் காணப்படும் சில ஓட்டைகளைச் சாதகமாக்கிக்கொள்ள அட்லெட்டிகோ முயலலாம்.
கடந்த டிசம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து இவ்வாண்டு ஜனவரி மத்தி வரை நடந்த 11 லீக் ஆட்டங்களில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே எதிரணி கோலடிக்க லிவர்பூல் விட்டுத்தந்தது. ஆனால், அக்குழு கடைசியாக ஆடிய ஐந்து ஆட்டங்களிலும் எதிரணிகள் கோல் அடித்தன. முதல்நிலை கோல்காப்பாளர் அலிசன் இடுப்பில் காயம் அடைந்திருப்பது லிவர்பூலுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
இருப்பினும், 2015ல் யர்கன் கிளோப் லிவர்பூல் நிர்வாகியாகப் பொறுப்பேற்ற பின்னர் ஆன்ஃபீல்டில் நடந்த ஐரோப்பிய அளவிலான போட்டிகளில் அக்குழு ஒருமுறைகூட தோற்றதில்லை என்பதாலும் மும்முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது என்பதாலும் அதன் ரசிகர்கள் பெரும் நம்பிக்கையுடன் உள்ளனர்.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளைப் போல ரசிகர்கள் இல்லாமல் மூடிய அரங்கில் விளையாட வேண்டும் என்ற நெருக்கடி இல்லை என்பதும் லிவர்பூலுக்கும் நிம்மதி அளிக்கும் விஷயம்.
காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டத்தில் தோற்றபின், "எங்களது ரசிகர்கள் தயாராக இருப்பர். ஆன்ஃபீல்டுக்கு வருக வருக! போட்டி இன்னும் முடிந்துவிடவில்லை," என கிளோப் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாளை அதிகாலை நடக்கும் இன்னோர் ஆட்டத்தில் பிரான்சின் பிஎஸ்ஜி குழுவும் ஜெர்மனியின் பொருஸியா டோர்ட்மண்ட் குழுவும் மோதவிருக்கின்றன. பாரிஸ் விளையாட்டரங்கில் நடக்கும் இந்த ஆட்டம், ரசிகர்களின்றி மூடிய அரங்கில் விளையாடப்படும்.

