ஆட்டத்திறனை மீட்ட லெஸ்டர் குழுவினர்

ஆட்டத்திறனை மீட்ட லெஸ்டர் குழுவினர்

2 mins read
0053fa6c-183e-4d45-8c07-d5d3371c31a2
ஆஸ்டன் வில்லா கோல்காப்பாளர் பெப்பே ரெய்னாவை ஏமாற்றி, பந்தை முன்னே கடத்திச் சென்று தமது குழுவின் முதல் கோலைப் போட்ட லெஸ்டர் சிட்டி வீரர் ஹார்வி பார்ன்ஸ். படம்: ராய்ட்டர்ஸ் -

லெஸ்டர்: அடுத்த பருவத்தின் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்தில் விளையாடுவதற்கான வாய்ப்பை லெஸ்டர் சிட்டி குழு வலுவாக்கிக் கொண்டுள்ளது.

கடைசியாக ஆடிய நான்கு ஆட்டங்களிலும் வெற்றியே காணாததால் பட்டியலின் இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் இடத்திற்கு இறங்கியது லெஸ்டர். அத்துடன், கடைசி மூன்று லீக் ஆட்டங்களிலும் அக்குழுவால் ஒரு கோலைக்கூட அடிக்க முடியவில்லை.

இதற்கெல்லாம் சேர்த்து, ஆஸ்டன் வில்லா குழுவிற்கு எதிராக நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் ஹார்வி பார்ன்சும் ஜேமி வார்டியும் ஆளுக்கு இரு கோல்களை அடிக்க, 4-0 என்ற கணக்கில் லெஸ்டர் மகத்தான வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியின்மூலம் லீக் கிண்ண அரையிறுதியில் வில்லாவிடம் தோற்றதற்கும் லெஸ்டர் பழிதீர்த்துக்கொண்டது.

"பிற்பாதி ஆட்டத்தில் எங்கள் குழுவினரின் எழுச்சியும் முயற்சியும் பிரமிக்க வைப்பதாக இருந்தது. இழந்த ஆட்டத்திறனை அவர்கள் மீட்டெடுத்துவிட்டனர். சில கோல்கள் அற்புதமானதாக இருந்தன. சில நேரங்களில் எங்கள் வீரர்கள் ஆடிய விதமும் அருமையாக இருந்தது," எனப் பாராட்டினார் லெஸ்டர் நிர்வாகி பிரண்டன் ரோஜர்ஸ்.

மாறாக, பட்டியலின் 19ஆம் இடத்தில் உள்ள வில்லா குழு, இன்னும் பத்து ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில் அடுத்த பருவ பிரிமியர் லீக்கில் விளையாடும் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள கடுமையாகப் போராட வேண்டும். இந்தப் பருவத்தில் ஆக அதிகமாக 56 கோல்களை வில்லாவே விட்டுக்கொடுத்துள்ளது.

"நாங்கள் பெரிய தவறு செய்து விட்டோம். எங்களது தவறுகளை எதிரணி சாதகமாக்கிக்கொண்டது. இந்தப் பருவத்தில் எமது வீரர்களைவிட வேறு எந்தக் குழுவினரும் அதிகமாக தவறிழைத்திருக்க மாட்டார்கள்," என்றார் வில்லா நிர்வாகி டீன் ஸ்மித்.