புதுடெல்லி: இவ்வாண்டு ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு இதுவரை இந்திய குத்துச்சண்டை போட்டியாளர்கள் எட்டுப் பேர் தகுதிபெற்றுள்ளனர்.
51 கிலோ எடைப் பிரிவில் 37 வயதான மேரி கோம், 60 கிலோ எடைப் பிரிவில் சிம்ரன்ஜீத் சிங், லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ) என இந்தியப் பெண்கள் நால்வர் ஒலிம்பிக்கில் பதக்கங்களைக் குறிவைத்துக் களமிறங்கவுள்ளனர்.
அதேபோல், 52 கிலோ எடைப் பிரிவில் உலகின் முதல்நிலை வீரராக இருக்கும் அமித் பங்கால், விகாஷ் கிருஷ்ணன் (69 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ), சதீஷ் குமார் (91 கிலோ) என ஆடவர் நால்வரும் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து இந்திய குத்துச்சண்டை அணியின் உயர்செயல்திறன் இயக்குநர் சான்டியாகோ நீவா கூறுகையில், "ஒலிம்பிக்கிற்கு இதுவரை குத்துச்சண்டை போட்டியாளர்கள் எட்டுப் பேர் தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இன்னும் இருவருக்கு வாய்ப்பு இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய முன்னேற்றம். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, பதக்கங்களை வெல்ல அதிக கவனம் செலுத்துவோம்," என்றார்.

