சிங்கப்பூர் காற்பந்துக் குழு 2034ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தகுதிபெற வேண்டும் என்ற இலக்கு ஒரு 'தேசியத் திட்டம்' என கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சும் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கமும் கூட்டறிக்கை மூலம் தெரிவித்துள்ளன.
முன்னதாக, 'கோல் 2034' என்பது சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் இலக்கு என்றும் அது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டதல்ல என்றும் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
ஆனால், அவரது கருத்து வியப்பளிப்பதாக உள்ளது என்று காற்பந்துச் சங்கத்தின் செயற்குழு கூறியிருந்தது. அத்துடன், இந்த விவகாரத்தில் அமைச்சின் நிலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என விளக்கம் கோரப்படும் என்றும் காற்பந்துச் சங்கம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து நேற்று வெளியான கூட்டறிக்கையில், "அமைச்சும் காற்பந்துச் சங்கமும் 'கோல் 2034' குறித்து தொடர்ந்து விவாதிக்கும். அந்த இலக்கை எட்ட உரிய பங்காளி அமைப்புகள் ஆதரவளிக்க வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

