லைப்ஸிக் (ஜெர்மனி): சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிகளில் தமது குழுக்களை முழுத் திறனுடன் விளையாட வைத்து வெல்வதில் கெட்டிக்காரர் என்று பெயர் பெற்ற டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு நிர்வாகி ஜோசே மொரின்யோ நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமது குழு பரிதாபமாக தோற்றதைக் கண்டு ஒன்றும் செய்ய முடியாமல் தவித்தார்.
ஜெர்மனியின் லைப்ஸிக் குழுவிற்கெதிரான அந்த ஆட்டத்தில் அக்குழுவின் மார்செல் சபிட்சர் பத்தாவது நிமிடத்திலேயே கோல் போட்டு அதிர வைத்தார்.
பின்னர், அவரே 21ஆம் நிமிடத்தில் இரண்டாவது கோலையும் போட்டு லைப்ஸிக் குழு ஆட்டத்தை தனது முழுக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள உதவினார்.
ஆட்டம் முடியும் தறுவாயில், 87ஆம் நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய எமில் ஃபோர்ஸ்பர்க் என்பவர் தமது பங்குக்கு ஒரு கோல் போட்டார். இதைத் தொடர்ந்து முதல் சுற்று ஆட்டத்தில் போட்ட ஒரு கோலையும் சேர்த்து லைப்ஸிக் குழு 4-0 எஎன மொத்த கோல் எண்ணிக்கையில் வென்றது.
ஹேரி கேன், சோன் ஹியூங் மின், மூசா சிசோக்கோ ஆகியோருடன் தற்பொழுது ஸ்டீவன் பெர்குவின் என்பவரும் காயம் காரணமாக ஸ்பர்ஸ் அணிக்கு விளையாட முடியாவிட்டாலும் இவ்வளவு பெரிய தோல்வி மொரின்யோவுக்கு ஒரு பெரிய அடிதான் என்பதை மறுக்க முடியாது என பிபிசி ெசய்தித் தகவல் தெரிவிக்கிறது.
இதில் லைப்ஸிக் குழு ஆட்டத்தில் காட்டிய தீவிரம் ஸ்பர்சிடம் இல்லை என்று கூறப்படுகிறது. பந்தை தன்வசப்படுத்த லைப்ஸிக் போராடிய விதம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இனி அடுத்த பருவ சாம்பின்ஸ் லீக் போட்டியிலாவது விளையாடும் அளவுக்கு பிரிமியர் லீக்கில் ஸ்பர்ஸ் தகுதி பெறுமா என்பதே தற்போதைய கேள்வி.
மொரின்யோ நிர்வகிக்கும் அணிகள் நல்ல தற்காப்புத் திறனை வெளிப்படுத்தும் என்று ஒரு காலத்தில் கூறப்பட்டதுண்டு.
ஆனால், இந்தப் பருவத்தில் மொரின்யோவின்கீழ் விளையாடிய 26 ஆட்டங்களில் வெறும் மூன்று ஆட்டங்களில் மட்டுமே ஸ்பர்ஸ் குழு கோல் புகாமல் பார்த்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்றோர் ஆட்டத்தில், இத்தாலியின் அட்லாண்டா, ஸ்பெயினின் வெலன்சியாவை 8-4 என்ற மொத்த கோல் எண்ணிக்கையில் வெற்றி கொண்டது.

