தனிமைப்படுத்தப்பட்ட ஆர்சனல் வீரர்கள்

தனிமைப்படுத்தப்பட்ட ஆர்சனல் வீரர்கள்

1 mins read

லண்டன்: மான்செஸ்டர் சிட்டி-ஆர்சனல் காற்பந்துக் குழுக்களுக்கு இடையே நேற்று நடக்க இருந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இரு வாரங்களுக்குமுன் நடந்த யூரோப்பா லீக் ஆட்டமொன்றில் ஆர்சனல், கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாக்கோஸ் குழுவுடன் மோதியது. அந்த நேரத்தில், அந்தக் குழுவின் உரிமையாளருடன் ஆர்சனல் வீரர்கள் தொடர்பில் இருந்தனர். இப்போது அவரை கொரோனா கிருமி தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுவே மேன்சிட்டி-ஆர்சனல் இடையிலான ஆட்டம் தள்ளிப்போக காரணம்.

இதையடுத்து, 14 நாட்களுக்கு ஆர்சனல் ஆட்டக்காரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப் படுவர் என்று அக்குழு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

"கொரோனா கிருமி தொற்றியவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் 14 நாட்கள் வெளியே எங்கும் செல்லாமல் வீடுகளுக்குள் இருக்கவேண்டும் என்ற அரசாங்கத்தின் வழிகாட்டி நெறிமுறைகளை உறுதியாகப் பின்பற்றுவோம்," என்று அறிக்கை மூலம் ஆர்சனல் கூறியிருக்கிறது.

ஒலிம்பியாக்கோஸ் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் ஆட்டத்தில் ஆர்சனல் தோற்றுப் போனது. இந்நிலையில், ஒலிம்பியாக்கோஸ் உரிமையாளர் வேங்கலிஸ் மரினகிஸ், தம்மை கொரோனா தாக்கி இருப்பதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.

போட்டிக்குப் பிறகு அவரைச் சந்தித்த ஆர்சனல் வீரர்களும் நான்கு ஊழியர்களும் இல்லத் தடைக்காப்புக் காலம் முடியும் வரை வீடுகளிலேயே இருப்பர் என்று ஆர்சனல் தெரிவித்துள்ளது.