ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்

1 mins read
40b7523a-8f1b-429c-8714-8fe78221dbff
-

புதுடெல்லி: இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் தொடர் இம்மாதம் 29ஆம் தேதி தொடங்குகிறது. மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், சீனாவில் தொடங்கிய கொரோனா கிருமி, இப்போது 95க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா கிருமி பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கிருமி பரவுவதைத் தடுக்க பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாமென்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி, "ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. இது குறித்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் தற்பொதைய நிலவரத்தைத் தீவிரமாக கண்காணித்து வருகிறோம், பிசிசிஐ தரப்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்," என கூறப்பட்டது.

ஐபிஎல் தொடரை குறிப்பிட்ட தேதியிலேயே தொடங்குமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து மும்பையில் நாளை மறுநாள் (மார்ச்14) நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது. இது ஒருபுறமிருக்க, கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 15ஆம் தேதி வரை வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கு விசா வழங்குவதில் இந்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதால், ஐபிஎல் போட்டி தொடங்கினாலும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை வெளிநாட்டு வீரர்களால் போட்டிகளில் கலந்துகொள்ள இயலாது என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.